எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பில் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை: தமிழிசை கருத்து..!

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பில் யாருக்கும் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை” என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்று (வியாழக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். ஒரு நீதிபதி தகுதி நீக்கம் செல்லும் என்கிறார். மற்றொரு நீதிபதி செல்லாது என்கிறார். இந்த தீர்ப்பு தீர்வில்லாமல் வந்திருக்கிறது.

தீர்வை தரும் தீர்ப்பை தான் எதிர்பார்த்தோம். இந்த தீர்ப்பில் யாருக்கும் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை. வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்குமா அல்லது புஷ்வாணமாக ஆகிவிடுமா என எதிர்பார்த்திருந்த நிலையில், இத்தீர்ப்பு ஊசிவெடியாக வெடித்துள்ளது. மூன்றாவது நீதிபதி என்ன தீர்ப்பு சொல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என நீதித்துறை சொல்லியிருக்கிறது.

இந்த மாறுபட்ட உத்தரவு வழங்குவதற்கு இரு நீதிபதிகளுக்கும் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது. இந்த தீர்ப்பில் யாருக்கும் பின்னடைவு கிடையாது. நிச்சயமற்ற தன்மையை தமிழக அரசியல் சூழலில் இந்த தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது” என தமிழிசை தெரிவித்தார்.

Leave a Response