நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குபெற முயற்சி எடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்…

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குபெற தமிழக அரசு விரைந்து முயற்சி எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “பிரதீபா கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்று, நீட் தேர்வில் 155 மதிப்பெண் எடுத்ததால், அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல், சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க பணம் செலுத்த சூழ்நிலையில், நிகழாண்டு நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால், 39 மதிபெண்களே பெற்றதால், தனது கனவு நனவாகவில்லை என்ற ஏமாற்றத்தால் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதேபோல, மேல்சேவூரைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா தற்கொலை முயற்சி மேற்கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற அரசு விரைந்து முயற்சி எடுக்க வேண்டும்.

கடந்தாண்டு அனிதா, நிகழாண்டு பிரதீபாவை இழந்துள்ளோம். மாணவி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Response