தூத்துக்குடி பொதுமக்கள் மீது, குறி தவறாமல் சுட்டவர்களுக்கு, குறிப்பாக வாயிலேயே சுட்டவருக்கு பெஸ்ட் சூட்டர் அவார்டு, தூத்துக்குடி மக்கள் கைகளால் கொடுக்க வேண்டும் என்று விஜய் விருது வழங்கும் விழாவில் நடிகர் பார்த்திபன் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பிரபல சின்னத்திரை தொலைக்காட்சி வருடம் தோறும் நடத்தி வரும் விருது விழாக்களில் ஒன்று ‘விஜய் அவார்ட்ஸ்’. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த விருது விழாவை, இந்த வருடம் விஜய் டிவி 10 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி மிகவும் பிரமாண்டமாக நடத்தியது.
இந்த விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், அறம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பட விருதை மெர்சல் படத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி போராட்டத்தின்போது, மக்களை குறி தவறாமல் சுட்டதற்கு பெஸ்ட் சூட்டர் விருது, மக்கள் கைகளால் கொடுக்க வேண்டும் என்றார். நான் சமூக விரோதிகளை சொல்லவில்லை என்றும் பார்த்திபன் பேசினார். விருது வழங்கும் விழாவில் நடிகர் பார்த்திபன் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.