‘அம்மா’ கோவிலில் நாளை அன்னையர் தினத்தை கொண்டாடும் ராகவா லாரன்ஸ் !

ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு நாளை ( 13ம் தேதி) அன்னையர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

கருவில் சுமந்து, தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாக்களுக்கு, பிள்ளைகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த நாளில் பரிசுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பர்.

அந்தவகையில், கடந்தாண்டு அன்னையர் தினத்தன்று நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது தாய்க்காக அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயலில் கோவில் ஒன்றைக் கட்டினார்.

இந்நிலையில், இந்தக் கோவில் திறக்கப் பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டியும், அன்னையர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தனது தாயின் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகளை ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார்.

அதன்படி, நாளை காலை 10 மணிக்கு தனது ஆஸ்ரமத்தில் படிக்கும் குழந்தைகள் மத்தியில் பூஜை நடத்தப்படுகிறது. பின்னர் மற்ற தாய்மார்களை கெளரவப் படுத்தவும், முதிய தாய்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் அன்னையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுங்கள். அன்னையை வணங்கினால் எந்த துன்பமும் இல்லை’ என தனது ரசிகர்களுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

Leave a Response