அகோரி கோலத்தில் கதை கேட்ட வில்லன் நடிகர் !

என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோயிலிலே, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, என் ஆச ராசாவே என வரிசையாக கிராமத்து பின்னணியிலான படங்களை இயக்கி வந்தவர் கஸ்தூரிராஜா. கடந்த சில வருடங்களாக புதிய படம் எதுவும் இயக்காமலிருந்தார். தற்போது, ‘பாண்டிமுனி’ என்கின்ற திகில் படம் ஒன்றை  இயக்குகிறார். உன்னை சரணடைந்தேன், மாயவன் போன்ற படங்களில் நடித்த இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் இப்படத்தில் அகோரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி இயக்குனர் கூறியதாவது:-

தமிழில் அதிரடியாக ரீஎன்ட்ரி ஆக வேண்டும் என்று கடந்த 10 வருடத்துக்கு மேலாக அமைதியாக இருந்தேன்.

அந்தசமயத்தில்தான் ‘பாண்டிமுனி’ ஸ்கிரிப்ட் உருவானது. பாதி கடவுள், பாதி பேய் என்ற கருவுடன் இதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. பழங்காலத்து சரித்திர பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இக்காட்சிகளில் இந்துஸ்தானி கிளாசிக்கல் டச் இருக்கும். நடனம் தெரிந்த ஒரு நடிகை தேவைப்பட்டார். நிகிஷா பட்டேல் கதக் நடனம் தெரிந்தவர். அவர் நீலவேணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாண்டியம்மா என்ற மற்றொரு கதாபாத்திரத்தில் வங்காள நடிகை மெகாலி நடிக்கிறார். அகோரியாக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார்.

இவரிடம் கதை சொல்ல சென்ற அனுபவம் மறக்க முடியாது. பாதி கதையை கேட்டதும் அறைக்குள் சென்று இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டு அகோரிபோல் மேக் அப் அணிந்து வந்தார். அந்த தோற்றத்திலேயே முழுகதையும் கேட்டார். அவரைப்போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகரை பார்ப்பது அரிது. மதுஅம்பாட் ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை. முழுக்க முழுக்க காட்டு பகுதியில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இவ்வாறு கஸ்தூரிராஜா கூறினார்.

Leave a Response