க்யூப் பிரச்னையில் இருந்து விடுபட தயாரிப்பாளர் சங்கம் புதிய ஒப்பந்தம்…

க்யூப் மற்றும் யு.எஃப்.ஓ நிறுவனங்களின் டிஜிட்டல் ஒளிபரப்புக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான தியேட்டர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்யும் க்யூப் நிறுவனத்தின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

அதற்காக, ஏரோக்ஸ், மைக்ரோஃப்ளக்ஸ் ஆகிய சிறிய டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் குறைந்த செலவில் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.

இந்நிலையில், மேலும் ஒரு பெரிய நிறுவனமும் தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. வட இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கிவரும் நிறுவனமான கே செரா செரா புதிதாக ஒப்பந்தம் போட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயித்த கட்டணத்தில் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கவும், தயாரிப்பாளர் சங்கத்தின் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படவும் தயாரிப்பாளர்களோடு இணைந்து ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது கே செரா செரா நிறுவனம்.

இனிமேல், திரையரங்குகளுக்கு கன்டென்ட்டை தயாரிப்பாளர் சங்கமே நேரடியாக வழங்கும். டிஜிட்டல் கட்டணப் பிரச்னையில் தமிழ் சினிமா வளர்ச்சிக்கான பணிகள் தொடர்ந்து அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Response