சிஎஸ்கே அனுமதி-சேப்பாக்கம் மைதானத்திற்கு ரசிகர்கள் கைபேசி கொண்டு வரலாம்…

சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் செல்போனை கொண்டு வரலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

தமிழ் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

எதிர்ப்புக்கிடையே நடைபெறும் போட்டி என்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமாண்டோ படை மற்றும் அதிதீவிர படை வீரர்களும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் பார்க்க வரும் ரசிர்களுக்கு பாதுகாப்பு கருதி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் லேப்டாப், டிஜிட்டல் டைரி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து வர கிரிக்கெட் மைதான நிர்வாகம் நேற்று தடை விதித்திருந்தது.

தண்ணீர் பாட்டீல் கொண்டு வர கூட தடைவிதிக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில் கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்கள் மைதானத்திற்கு செல்போனை கொண்டு வரலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் மைதான நிர்வாகம் செல்போனை கொண்டு செல்ல தடை விதித்திருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செல்போனை கொண்டு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிரிக்கெட் நிர்வாகம் தடைவிதித்திருந்தது.

ஆனால் தடையை நீக்க அதிகாரமில்லாத நிலையில் சிஎஸ்கே அணி தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response