தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீரை பெற்றுத் தருவோம்-தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

டெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீரை பெற்றுத் தருவோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு, 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ஒரு ஸ்கீமை (திட்டத்தை) மத்திய அரசு உருவாக்க வேண்டும். 6 வாரங்களுக்குள், காவிரி தீர்ப்பை அமல்படுத்த ஸ்கீம் உருவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகம் சார்பில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில், தொடரப்பட்டது. இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில், வழக்கு பரிசீலனைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா கூறுகையில்,

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வகை செய்வோம். தமிழக விவசாயிகளின் கவலை எங்களுக்கும் தெரியும். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை நீதிமன்றம் பெற்று தந்தே தீரும் என்று தெரிவித்தார்.

Leave a Response