ரஜினிகாந்த்-க்கு விளக்கம் அளித்த ஸ்டெர்லைட் நிர்வாகம்..

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ரஜினிகாந்த் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில், ஆலை நிர்வாகம் ரஜினிகாந்திற்கு விளக்கம் அளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த ஒரு மாதத்தை தாண்டியும், தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மக்களுக்கு ஆதரவாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரஜினிகாந்த்,

“ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று மக்கள் அவதிப்பட்டு போராடிக் கொண்டிருக்கும்போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது” என பதிவிட்டார்.

இந்நிலையில், தங்களுடைய ஆலை செயல்பாடுகள் குறித்து ரஜினிகாந்திற்கு தவறான தகவல்கள் சென்றடைந்திருப்பதாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பதிவில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் குறித்த உண்மையான தகவல்கள் என குறிப்பிட்டு ரஜினிகாந்திற்கு அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் ஏற்படுகின்றது என்பதற்கான வாதத்தை நிரூபித்திட மருத்துவ அடிப்படையிலான அல்லது மக்கள்தொகை அடிப்படையிலான தரவுகள் இல்லை.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் தூத்துக்குடி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் பசுமைப் போர்வையை ஆலை நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

சல்ஃபர் டை ஆக்ஸைடால் புற்றுநோய் ஏற்படுவதில்லை என புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி மையம் நிரூபித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர், நீர் நிலைகள் மாசடைவதில்லை” என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ரஜினிகாந்திற்கு விளக்கம் அளித்துள்ளது.

அது மட்டும் அல்லாது நடிகர்கள் ஆரி ,ஹிப்ஹோப் தமிழா ஆதி, ஜி வி பிரகாஷ் ஆகியோருக்கும் ஸ்டெர்லைட்  நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Leave a Response