கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை ஸ்டிரைக் தொடரும், அரசிடம் முறையிட பேரணி: விஷால்

சென்னை: டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் சினிமா உலகம், கடந்த 1ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. புது படங்கள் வெளியாகவில்லை. படப்பிடிப்பும் நடக்கவில்லை. ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்தம்பித்து உள்ளது.தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நிருபர்களிடம் கூறுகையில், திரையுலகை சீரமைக்கவே வேலைநிறுத்தம் நடக்கிறது. தயாரிப்பாளர் சங்க முடிவை ஏற்பதாக விநியோகஸ்தர் சங்கம் கூறியுள்ளது.

மக்கள் சினிமா தியேட்டருக்கு வருவது எளிதான விஷயமாக இருக்க வேண்டும்.ஆன்லைன் மூலம் வசூலிக்கப்படும் சினிமா கட்டணங்கள், தயாரிப்பாளர்களுடன் பங்கிடப்படுவது இல்லை. ஆன்லைன் கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுவதை ஏற்க முடியாது. இதனால், பலனடைவது வெளியில் உள்ள நிறுவனம் தான். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் டிக்கெட்டை கணினி மையமாக்க வேண்டும்.எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது.

திரைத்துறை பிரச்னைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. தயாரிப்பாளர்கள் பிரச்னை, தற்போதுவரை நிறைவேற்றப்படவில்லை. புதிய படங்கள் வெளியாக வேண்டும் என்றால், எங்கள் கோரிக்கைகளை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசிடம் எங்கள் பிரச்னைகளை, பேரணியாக சென்று மனு கொடுக்க உள்ளோம். அடுத்தவாரம் பேரணி இருக்கும். விவசாயிகள் நிலைமையும், தயாரிப்பாளர்கள் நிலையும் ஒன்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response