கோவை தமிழன் கண்டறிந்த உயிரினம் !

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி, பறவைகள் பார்வையிடும் சுற்றுலாவிற்கு அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்றார். கடந்த பிப்ரவரி 17 முதல் 25ஆம் தேதி வரை பயணம் மேற்கொண்டிருந்தார். அஞ்சவ் மாவட்டம் கிபிதுவில் பறவைகள் பார்வையிடும் குழுவுடன் சுற்றுப்பயணம் சென்றார். காலை 9.50 மணியளவில், பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது வண்ணத்துப்பூச்சி ஒன்று பாறைகளில் தாவித் தாவிச் சென்று கொண்டிருந்தது. அதுகுறித்து அறியாத பாலாஜி, தனது கேமராவில் படம்பிடித்துள்ளார். தனது பயணத்தை முடித்துக் கொண்ட பின், படம்பிடித்த வண்ணத்துப்பூச்சி குறித்து பல்வேறு நிபுணர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் ஆன்லைனிலும் ஆராய்ந்து பார்த்துள்ளார். ஆனால் எந்தவொரு வண்ணத்துப்பூச்சி இனத்துடனும் பொருந்தவில்லை. இதையடுத்து இந்தியாவின் வண்ணத்துப்பூச்சிகள் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, விவரம் கேட்டுள்ளார். அதில் எரினிஸ் ஜீனஸ்(Erynnis Genus) என்ற அரிய வகை வண்ணத்துப்பூச்சி என்ற தெரியவந்தது.

மேலும் இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் இனம் என்பதால், புதிய கண்டுபிடிப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. முதன்முதலில் இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் அறிஞர் ஜான் ஹென்றி லீச்சால் 1891ல் கண்டறியப்பட்டது. இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் தென்கிழக்கு திபெத், மேற்கு சீனாவில் காணப்படும் அரிய வகையாகும் என்று தமிழ்நாடு வண்ணத்துப்பூச்சி அமைப்பின் அப்பாவு பாவேந்தன் கூறினார்.

Leave a Response