பாஸ்ட் அண்ட் புயூரியஸ் – விமர்சனம்!

fast-and-furious-6-poster1

ஐந்து பாகங்களாக வெளிவந்து சக்கை போடு போட்ட படம், ஒவ்வொரு பாகமும் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள், அசரவைக்கும் கார் ரேஸ் காட்சிகள், போலீஸ் துரத்தும் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியும் ரசிக்கவைக்கும்படி இருந்தது. தற்போது இந்த படத்தின் ஆறாவது பாகம் பெரிய நடிகர் பட்டாளத்துடன் வெளியாகியுள்ளது.

வின் டீஸல், பால் வால்கர் மற்றும் அவரது நண்பர்கள் கொள்ளையடித்த 100 மில்லியன் டாலர் பணத்தை வைத்துகொண்டு அவரவர் வழியில் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ராணுவ கிடங்கிற்கு செல்லும் ஆயுதங்களை ஒரு கும்பல் கடத்துகிறது. மேலும் அவர்கள் ஒரு பெரிய சதி வேலையில் ஈடுபட்டிருப்பது FBI-க்கு தெரிய வர, நண்பர் கூட்டணியின் உதவியை நாடி வருகிறார். மேலும் வின் டீஸல்-ன் காதலி லெட்டிசியா உயிருடன் இருப்பதாக தெரிய வர, நண்பர் கூட்டணி வேலையில் இறங்குகிறார்கள்.

வில்லன் கும்பலில் இருக்கும் அவளுக்கு பழைய நினைவுகள் ஏதும் தெரியாததால், அவளுக்கு எந்த நிகழ்வையும் புரியவைக்க முடியவில்லை. இந்நிலையில் லெட்டிசியா திரும்ப கிடைத்தாளா? வில்லன் கும்பல் போலீசிடம் மாட்டினார்களா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் அதிரடி ஆக்ஷன் கலந்து கொடுத்துள்ளனர்.

படத்தில் முக்கியமான ஹைலைட் ஆக்ஷன் காட்சிகளும், சேசிங் காட்சிகளும் தான். ஒவ்வொரு காட்சியிலும் கண் இமைக்காமல் பார்க்க வைத்துள்ளனர். வின் டீஸல், பால் வால்கர், வெயின் ஜான்சன்(ராக்) ஆகியோரின் சாகசங்களுடன் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்துள்ளனர். இடையிடையே வரும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இரண்டு பெண்களும் மோதிக்கொள்ளும் இரண்டு சண்டைக்காட்சிகளுமே சூப்பர்.

பாலத்தின் மீது நடக்கும் சண்டைகாட்சியில் டீஸல் பறந்து வந்து நாயகியை காப்பாற்றும் காட்சி சிலிர்க்க வைக்கிறது. ஆரம்பத்தில் நடக்கும் சேசிங் காட்சி, படத்தின் இறுதியில் வரும் விமான சண்டைக்காட்சி ஆகியவையும் உச்சம். படத்தின் இறுதியில் வில்லதனத்துடன் என்ட்ரி கொடுத்து அடுத்த பாகத்தில் தான் இருப்பதை உறுதி செய்கிறார் ஜேசன் ஸ்டேதம்.

படத்தில் வேகமான கார்களுக்கிடையே செல்லும் வேகமான ஒளிப்பதிவு படத்தின் வேகத்திற்கு உத்தரவாதம். படத்தின் பின்னணி இசை சூப்பர். மொத்தத்தில் கோடைகாலத்தில் ஒரு பொழுதுபோக்கு படமாக குடும்பத்துடன் சென்று பார்க்க ஏற்ற படம் இந்த Fast and Furious 6.