தேனியை தொடர்ந்து சேலத்திலும் பயங்கர தீ !

Erode.1.Regiona+28CB-FIRE.jpg

சேலம் ஊத்துமலை வனத்தில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மரம், செடி, கொடிகள் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் கோடை காலத்தில் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் தேனி மாவட்டம் குரங்கணி வனத்தில் ஏற்பட்ட தீயில், மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கினர். இதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து, மாநிலம்  முழுவதும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. தீ தடுப்பு பணியிலும் வன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாநகரத்தையொட்டியுள்ள ஊத்துமலை வனத்தில், நேற்று மாலை திடீரென காட்டுத்தீ பரவியது. மலை மீதுள்ள முருகன் கோயிலுக்கு கிழக்கு பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது. காய்ந்த மரங்கள், செடி, கொடிகள் கொளுந்து விட்டு எரிவதால், அந்த பகுதிக்கு யாரும் போக  முடியவில்லை. தீ எரிவதை அறிந்த சமூக காடுகள் கோட்ட வனச்சரகர் வைரம் தலைமையில் 20 வன ஊழியர்கள், கிராம வனக்குழுவினர் அப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், காற்றின் வேகத்தால் மிக அதிகளவு தீ பற்றி எரிந்ததால், அணைக்க முடியவில்லை. இதனால் மேலும் தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த  ஊத்துமலை வனத்தில் தானாக தீ பிடிக்க வாய்ப்பில்லை என வனத்துறையினர் கருதுகின்றனர். கோயிலுக்கு வந்தவர்களில் யாரேனும் தீயை பற்ற வைத்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, சேலம் தெற்கு வனச்சரகர் சுப்பிரமணி தலைமையிலான வன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Leave a Response