விமல் காட்டில் அடைமழை..! மன்னர் வகையறா..!

julie_liveday2

களவாணி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென்று இடத்தை பிடித்தவர் நடிகர் விமல். தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சொந்தமாக பட நிறுவனம் தொடங்கி ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை தயாரித்தார் விமல்.

இயக்குனர் பூபதிபாண்டியன் 4 கோடியில் படத்தை முடித்து தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் படம் போட்ட பட்ஜெட்டை தாண்டி இரண்டு மடங்காக்கி 8 கோடியில் முடிந்தது மட்டும் அல்லாமல் பட வெளியீட்டிற்கு 1.5 கோடி செலவையும் சேர்த்தால் 9.5 கோடிக்கு வியாபாரம் செய்தால் தான் கடனை அடைக்க முடியும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். அந்நேரம் பார்த்து ” ஜன்னல் ஓரம் ” படம் பிரச்சனை தலைதூக்கியது.

‘ஜன்னல் ஓரம்’ பட வெளியீடு சமயத்தில் தயாரிப்பாளருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், பைனான்சியர்களிடம் ஜாமீன் கையெழுத்து போட்டார் விமல். ‘ஜன்னல் ஓரம்’ படத் தயாரிப்பாளர் வாங்கிய கடனை அடைக்காததால், ஜாமீன் கையெழுத்து போட்ட விமல் அந்த படத்தின் கடன் 2 கோடியை அடைத்து விட்டுத்தான் படத்தை வெளியிட வேண்டும் என விநியோகஸ்தர்கள் சங்கம் பிரச்சனையை கிளப்பியது, என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார் விமல். இந்நிலையில் படம் வெளிவராது என ‘மூன்றெழுத்தில்’ படம் எடுத்த நிறுவனம் வதந்தி பரப்ப, திரையரங்க உரிமையாளர்களும் குழப்பமடைந்தனர். சென்னை சிட்டியில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஒரு ஷோவை மட்டும் மன்னர் வகையறாவுக்கு ரிஷர்வில் வைத்து விட்டு மற்ற படங்களை திரையிட ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

“தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது” என்ற பழமொழி கேற்ப அவரின் பழைய கடனையும் அடைத்து, தான் பைனான்ஸ் கொடுத்த பணத்தை பொறுமையாக வாங்கி கொள்வதாக கூறி, படத்தை குறித்த தேதியில் வெளியிட அனுமதி வழங்கினார் ‘அரசு பிலிம்ஸ்’ கோபி. விமலுக்கு உதவும் வகையில் கோவை ‘வேல் பிலிம்ஸ்’ வேல்முருகன், சேலம் ‘7G பிலிம்ஸ்’ சிவா ஆகியோர் தலா ஒரு கோடி கடன் வாங்கி கொடுத்தனர். பட வெளியீடு சமயத்தில் புதுப்புது பிரச்சனைகள் கிளம்பியதால் விளம்பரம் செய்வதில் குழப்பம் நீடித்தது. படம் வெளியான பிறகு முறையாக நல்ல விளம்பரம் செய்யப்பட்டது அதுமட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று காமெடியில் சக்கைபோடு போடும் “மன்னர் வகையறா” வசூலில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் சந்தோசமாக வலம்வருகிறார் விமல். நல்ல நடிப்பின் மூலம் தரமான படம் கொடுத்துள்ளதால், விமலை தேடி பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன, இதனால் இந்த ஆண்டு விமலிடம் 6 படம் கைவசம் உள்ளது.

இனி விமல் காட்டில் அடைமழை’தா போங்க..!

Leave a Response