‘ஞான கிறுக்கன்’ செட்டுக்குள் பிணத்தை புதைக்க வந்த கும்பல்!!

தங்கம்மாள் மூவீ மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக C.கணேசன், G.தங்கம்மாள் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘ஞான கிறுக்கன்’ என்று பெயரிட்டு உள்ளனர். கதையின் நாயகனாக ஜெகாவும், நாயகிகளாக பிரபல மலையாள நடிகை கேரள அரசு விருது பெற்ற அர்ச்சனா கவி, சுஷ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, செந்தில், செவ்வாளை ராஜு ஆகியோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு – S.செல்வகுமார். எடிட்டிங் – ராஜா முகமது. இசை – தாஜ்நூர். எழுதி இயக்குபவர் – இளையதேவன்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது. படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் ஒன்றை சொல்கிறேன். படத்தில் “ஒத்த உசிர கொண்டு வந்தோம்” என்ற தத்துவப் பாடல் இடம் பெற்றுள்ளது. அதை படமாக்குவதற்காக பல லட்ச ரூபாய் செலவில் ஒரு ஏக்கர் பரப்பில் மயான அரங்கம் ஒன்றை அமைத்தோம். படப்பிடிப்பை நடத்தும் வேளையில் அதை நிஜ மயானம் என நினைத்து ஒரு பிணத்தை எடுத்து வந்து புதைக்க வந்தார்கள்.

அவர்களிடம் இது செட் என்று சொல்லி அனுப்பி வைத்தோம். அவர்களிடம் புரிய வைத்து அனுப்பி வைக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும். காந்தி,  ஆபிரகாம் லிங்கன், மண்டேலா போன்றவர்களின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் போது, அதன் உண்மைத் தன்மை மாறாமல் எடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், ‘ஞானக் கிறுக்கன்’ உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. துளி அளவு கூட கற்பனை கலக்காமல் , உண்மையை விட்டு விலகாமல், சமசரம் செய்து கொள்ளாமல், உருவாகும் நிஜப் படம். படம் பார்க்கிற ஒவ்வொருவரும் அந்தக் கதையுடன் தாங்களும் பயணிப்பார்கள் என்பது நிச்சயம். ‘ஞானக் கிறுக்கன்’ உண்மைக்கதையின் பிரதிபலிப்பு என்கிறார் இளையதேவன்.