குஜராத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! பிரசாரம் ஓய்ந்தது!!

5089326e56f1a277b42aa581572cc333

குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 93 தொகுதிகளில் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக டிசம்பர் 9-ம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. முதல்கட்டத் தேர்தலில் சுமார் 67 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 93 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக, அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் பயணிக்கக்கூடிய முதல் கடல் விமானத்தில் பயணம் செய்தார்.

இந்தப் பயணம் தனக்கு பிரத்யேக அனுபவத்தைத் தந்ததாகவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு நீர்நிலைகளின் மேல் போக்குவரத்து வசதிகளை செய்வதற்கான அரசின் திட்டங்களுக்குத் தீர்வாக அமைந்ததாகவும் ட்விட்டர் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா மற்றும் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு நீர்நிலைகளில் போக்குவரத்தைப் பயன்படுத்த ஏதுவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடல் விமானங்களைப் பயன்படுத்துவதால், மிகப்பெரிய அணைகள், நீர்நிலைகளின் மீது பயணிக்க முடியும் என்றும், இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி மேம்பட்டு பொருளாதார வாய்ப்புகள் பெருகும் என்றும் மோடி கூறியுள்ளார். ஏற்கெனவே குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக பிரதமர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே, அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி, குஜராத்தில் ஒருசாரார் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளதாகவும், பிரதமர் மோடியும், முதல்வர் விஜய் ரூபானியும் அந்த வளர்ச்சியை மட்டுமே குறிப்பிட்டு வருவதாகவும் குறைகூறினார். அனைத்து மக்களின் உரிமைகளும் காக்கப்படவேண்டும் என்று ராகுல் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தின் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் மொத்தம் 851 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். என்றாலும் காங்கிரஸ் – பி.ஜே.பி. இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. நாளை பதிவாகும் வாக்குகளுடன், முதல்கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகளும் வரும் 18-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தேர்தலாக மாறியுள்ளது.

Leave a Response