தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் அமளி: விஷால் – சேரன் கோஷ்டிகள் மோதல் – பாதியோடு முடிந்தது கூட்டம்

 

 
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் சேரன் தரப்பினர்.

ஓய்வுபெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் விஷாலுக்கு எதிராக சேரன் தரப்பினர் கோஷம் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதனால், கூட்டம் பாதியோடு முடிக்கப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் டிசம்பர் 10-ம் தேதி (நேற்று) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், சங்கத் தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதால் இக்கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், இக்கூட்டத்தை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் கண்காணிப்பார் என்று அறிவித்தது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் 10-வது பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் முன்னிலையில் சங்கத்தின் தலைவர் விஷால், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, துணைத் தலைவர் பிரகாஷ் ராஜ் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் மூத்த தயாரிப்பாளர்கள் முக்தா சீனிவாசன், சி.வி.ராஜேந்திரன், பிர சாத் உள்ளிட்டோர் கவுரவிக் கப்பட்டனர்.

 

11ChRGNCheran Group

இதற்கிடையில், தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போதே பிரச்சினை எழுந்தது. மேடை யில் நிர்வாகிகள் இல்லாமல் எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாம் என மன்சூர் அலி கான் கேள்வி எழுப்பினார்.

பின்னர், விஷால் பதவி விலக வேண்டும் என்று சங்கத்தின் முன்னாள் செயலாளர், பொருளாளரான ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். ‘தயாரிப்பாளர் சங்கம் அரசை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. முந்தைய நிர்வாகங்களும் அரசை அனுசரித்து தான் நடந்தன. தற்போது அரசு சரியாக செயல்படவில்லை என்று கூறிய விஷால், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததால், தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார். அவருக்கு ஆதரவாக சேரன் மற்றும் தயாரிப்பாளர்கள் சிலரும் கோஷம் எழுப்பினர்.

இதற்கு பதில் அளிக்க விஷால் முயன்றார். ஆனால், அவரை பேசவிடாமல் மற்றவர்கள் கூச்சல் எழுப்பினர். இதனால், விஷால் – சேரன் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

ef3c079494038229588d4d0ed70709e9

இதற்கு நடுவே, சங்கத்தின் வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கும் படி செயலாளர் கதிரேசன் கேட்டுக்கொண்டார். அப்போது, பொதுக்குழுவில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தை நடத்த முடியாமல் போனதால், விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் மேடையில் தேசியகீதம் பாடி, கூட்டத்தை பாதியிலேயே முடித்தனர்.

 

விஷால் பேட்டி

பின்னர், செய்தியாளர்களிடம் விஷால் கூறும்போது, ‘‘சிலரது காழ்ப்புணர்ச்சி காரணமாக, பொதுக்குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்தன. இதெல்லாம் நீதிபதி முன்பு நடந்துள்ளது. அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். 149 படங்களுக்கு அரசு மானியம் அறிவித்துள்ளது. அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சங்க விதியில் இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி என்பது என் தனிப்பட்ட விருப்பம். போட்டியிடக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை’’ என்றார்.

Leave a Response