பத்மாவதி திரைப்பட விவகாரம்: நாடாளுமன்ற நிலைக்குழு முன் பன்சாலி ஆஜரானார்!

பத்மாவதி திரைப்பட பிரச்னை தொடர்பாக அப்படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு இன்று (வியாழன்) ஆஜராகி தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தை வெளியிட கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இதன்காரணமாக ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ‘பத்மாவதி’  திரைப்பட விவகாரம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தியது. இக்குழுவின் முன்பு, சஞ்சய் லீலா பன்சாலி இன்று (வியாழன்) நேரில் ஆஜராகி தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

 

பாஜக எம்பி அனுராக் தாக்கூர் தலைமையிலான இக்குழுவில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜ்பாப்பர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, பத்மாவதி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் தொடர்பாக விரிவாக கேட்டறிந்தனர்.

 

முன்னதாக மக்களவை குழு முன், மத்திய திரைப்பட தணிக்குழு தலைவர் பிரசூன் ஜோஷி ஆஜராகி ‘பத்மாவதி’ திரைப்பட விவகாரம் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்தார்.

Leave a Response