‘எங்கள் அண்ணா’, ‘ஏய்’, ‘பில்லா’, ‘அழகிய தமிழ்மகன்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நமீதா.
குஜராத்தை சேர்ந்த நமீதா கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தார். ‘மச்சான்ஸ்’ என்று ரசிகர்களை அழைத்து உற்சாகமூட்டுவார். சமீபகாலமாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு குறைந்தன.
இதையடுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்யப்போவதாக சமீபத்தில் நமீதா அறிவித்தார். அவரை நன்றாக தெரிந்த பிறகே காதலிப்பதாகவும் கூறி இருந்தார். அதன்படி அவர்களது திருமணம் திருப்பதியில் இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக நமீதாவுக்கு மெகந்தி போட்டு கொள்ளும் சடங்கு திருப்பதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. குஜராத் பாரம்பரிய முறைப்படி நமீதா கைகளில் மெகந்தி ஓவியங்கள் வரையப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தமும் நடந்தது. பின்னர் குடும்பத்தினர் அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை சினேகா, அவரது கணவர் பிரசன்னா உள்பட நடிகர், நடிகைகள், டி.வி. நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருப்பதி தாமரை கோவில் என்றழைக்கப்படும் இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் நமீதா-வீரேந்திர சவுத்ரியின் திருமணம் இன்று காலை நடந்தது.
நமீதாவின் திருமணத்தில் சரத்குமார், ராதிகா, காயத்ரி ரகுராம், ஆரத்தி, சக்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.