புகார் மேல் புகார் கொதித்தெழுந்து அதிரடி காட்டிய சப்- கலெக்டர்!

b4ed966eeb2bff46604485a210e06573 (1)

புதுக்கோட்டை நகர், இன்று காலையில் பரபரப்புடன்தான் கண்விழித்தது. அதற்குக் காரணம், சப்- கலெக்டர் சரயு. இவர், புதுக்கோட்டை நகர் அருகே உள்ள திருவப்பூர் பகுதியில் செயல்பட்டுவந்த மதுபான பாரை இன்று காலை ஆய்வுசெய்து, அதிரடியாகச் சீல் வைத்தார். இந்த நடவடிக்கை, நகரெங்கும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திருவப்பூர் பகுதியில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க என்ன காரணம் என அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது, “இந்த பாரில் 24 மணி நேரமும் சரக்கு கிடைக்கும். ஏதோ காய்கறி மார்க்கெட்டில் கூறுகட்டி காய்களை விற்கிற மாதிரி, விஸ்கி,பிராந்தியை கூவிக்கூவி விற்பனை பண்றாங்க. ரோடுல பெண்கள் பகல் நேரத்தில்கூட நடமாட முடியல. குழந்தைகள் பயந்து பயந்து ஸ்கூலுக்குப் போறாங்க. வெளிப்படையா சொல்ல முடியாம தவிச்சுக்கிட்டிருந்தோம். சப்-கலெக்டரின் நடவடிக்கைக்குப் பிறகுதான், எங்களுக்கு நிம்மதியா இருக்கு. இந்த பார் கொஞ்ச நாள்ல திறந்துடாம இருக்கவும் சப் -கலெக்டர்தான் நிரந்தரமான நடவடிக்கை எடுக்கணும்” என்றார்கள்.

43e3827c18e3db7e0635586a12298384

இதுகுறித்து சரயு பேசும்போது, “இந்த பார்குறித்து நிறையப் புகார்கள் இந்தப் பகுதி மக்களிடமிருந்து எனக்கு வந்தது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். பொதுமக்கள் மத்தியில் சரயுவின் இந்த நடவடிக்கைக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கூடவே, கூடுதல் கோரிக்கை ஒன்றும் எழுந்துள்ளது. “சப்- கலெக்டர் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதுபோல, பஸ் ஸ்டாண்ட் அருகில் சட்டத்துக்குப் புறம்பாக இரவு 12 மணி வரை மதுபான பார்கள் செயல்பட்டுவருகிறது. மதுபானமும் இங்கு தாராளமாகக் கிடைக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாடவே முடியவில்லை. அதற்கும் நம்ம சப்- கலெக்டர் முடிவு கட்டினா, நல்லாயிருக்கும்” என்றனர்.

Leave a Response