பாஜகவினரின் வீடுகளில் ஏன் வருமான வரி சோதனை நடக்கவில்லை? – கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி கேள்வி

pugazhendi--34-11-1505124357

மத்திய அரசை விமர்சிப்போரின் வீடுகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. இதேபோல பாஜக தலைவர்களின் வீடுகளில் ஏன் வருமான வரி சோதனை நடத்தப்படுவதில்லை என கர்நாடக அதிமுக (அம்மா) செயலாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளரும், அக்கட்சியின் கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தியின் பெங்களூரு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதே போல பெங்களூருவில் உள்ள அதிமுக (அம்மா) கட்சி அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து புகழேந்தி  கூறுகையில்,

“வருமான வரித்துறையினரின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். அதிகாரிகள் எழுப்பிய கேள்விக்கு எனக்கு தெரிந்த பதிலை சொன்னேன். விசாரணை முடிவடையாததால், எதை பற்றி விசாரித்தார்கள் என்பதை சொல்ல முடியாது. நான் வருமானத்துக்கு மீறியோ, தவறான வழியிலோ சொத்து சேர்க்கவில்லை. தேர்தல் ஆணைய வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரையோ, ஆஸ்திரேலிய பிரகாஷையோ பார்த்தது கூட இல்லை.

dinakaran12jpg

கல்வி நிறுவனம், அறக்கட்டளை, வீட்டு வாடகை கொண்டே வாழ்ந்து வருகிறேன். சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கியதில்லை. என் வீட்டிலும், ஜெயலலிதா எனக்கு கொடுத்த காரிலும் அதிகாரிகள் சல்லடை போட்டு தேடியும் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. அரசியலில் இருந்து என்னை ஒழிப்பதற்காகவே இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள். இத்தகைய சோதனையின் மூலம் என்னை மிரட்ட நினைத்தால், பாஜக நிச்சயம் தோல்வி அடையும். எக்காரணம் கொண்டும் சசிகலாவையும், தினகரனையும் விட்டு போக மாட்டேன்.

மத்திய அரசை விமர்சிப்போரின் வீடுகளை மட்டும் குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஏன் பாஜக தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். இப்போது தினகரன் ஆதரவாளர்களை குறிவைத்து சோதனை நடத்தி இருக்கிறார்கள். இத்தகைய சோதனைகளையெல்லாம் சட்டப்படி சந்தித்து வெற்றி பெறுவோம்” என்றார்.

Leave a Response