மேம்பாலம் கட்டியதில் மிகப்பெரிய ஊழல்!  ஸ்டாலின் குற்றச்சாட்டு

23231628_882991565194048_3344017394651753409_n

தஞ்சை – நாகை சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மிகப்பெரியளவில் ஊழல் நடந்துள்ளது எனக் குற்றம்சாட்டினார் ஸ்டாலின்.

தஞ்சை மக்களின் நீண்டநாள் கோரிக்கை போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதுதான். அந்தக் கோரிக்கையை ஏற்ற அ.தி.மு.க அரசு கடந்த 2013-ம் ஆண்டு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தொழிலதிபரும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் பினாமியாகச் செயல்படும் எஸ்.ஆர்.ஐ கன்ஸ்ட்ரக்ஷனிடம் கொடுக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த மேம்பால பணி முடிவடைந்து எதிர்வரும் 29-ம் தேதி தஞ்சாவூரில் அண்ணா நூற்றாண்டு விழாவுக்கு வருகைதரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பதற்காக அவசரம் அவசரமாக மேம்பாலப் பணிகளை முடித்தார்கள். திடீரென கடந்த இரண்டு நாள்களுக்கு முன் மேல்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் தகவல் தெரிவித்தனர்.

stalin_thanjavur_17445

பின்னர், மேம்பாலத்தை வந்து ஆய்வு செய்த கலெக்டர் அண்ணாதுரை விரிசல் குறித்து விசாரிப்பதற்காகக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் பணமதிப்பிழப்பு ஆர்ப்பாட்டத்தில் மதுரை வழியாகத் திருவாரூர் சென்ற தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தஞ்சாவூர் – நாகை சாலையில் போடப்பட்டு விரிசல் அடைந்துள்ள மேம்பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர், பத்திரிகையாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின்,

 

“கட்டி முடிப்பதற்குள் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றால், தரமானதாக மேம்பாலம் கட்டுமானப்பணிகள் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தபிறகு வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும்போது விரிசல் ஏற்பட்டிருந்தால் மிகப்பெரியளவில் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும். மேம்பாலப் பணியில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதை விசாரிப்பதற்கு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அப்படியில்லையென்றால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக மேம்பாலப் பணிகளில் ஊழல் குறித்து விசராணைக் கமிஷன் அமைத்து விசாரணை செய்யப்படும்” என்றார்.

Leave a Response