நாளை வலுப்பெறும் புதிய காற்றழுத்தம் : தென் மாவட்டங்களில் வெலுத்துவாங்க தயாராகும் மழை!

13-rain-666-600-jpg
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. அந்த சமயத்தில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவானதால் தமிழக கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு பெய்த மிக பலத்த மழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்க நேரிட்டது.

இதையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக மழை பெய்தபடி உள்ளது. இந்த நிலையில் வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டுக்கு அதிக மழை கிடைத்தது.

201711071331340056_South-Districts-in-Tamil-Nadu-will-receive-Heavy-Rainfall_SECVPF

குமரிக் கடல் முதல் தென் மேற்கு வங்கக் கடல் வரை பரவி இருந்த அந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக சென்னையில் 500-க்கும் மேற்பட்ட பகுதிகள் மிதக்கும் அளவுக்கு மழை பெய்தது. நேற்று அந்த குறைந்த காற்றழுத்தம் வலு இழந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் மழை பெற்றுத் தரும் வகையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-

vanilai12
அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இந்த புதிய காற்றழுத்தம் நாளை (புதன்கிழமை) முதல் வலுவடையத் தொடங்கும். இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். விட்டு, விட்டு மழை பெய்யும். சில சமயங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய காற்றழுத்தம் நாளைய தினத்துக்குப் பிறகு மேலும் வலுவடையும் போது தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் அதிக மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

rain_chennai_6_15058_13547
இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் தலைஞாயிறில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது. திருத்துறைப்பூண்டியில் 7 செ.மீ., கோத்தகிரி, நீடாமங்கலம் 5 செ.மீ., பாபநாசம், நாகை, குன்னூரில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
பரங்கிப்பேட்டை, தரமணி, பெரியார், திருவள்ளூர், குடவாசல், அம்பாசமுத்திரம், பொன்னேரி, சத்தியமங்கலம், குளித்தலையில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை தாம்பரத்தில் 2 செ.மீ. மழையும், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது. காலை 9 மணி முதல் 10 மணி வரை சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மிக கனமழை பெய்தது.
பள்ளிக்கரணை அருகே உள்ள நாராயணபுரம் ஏரி சில தினங்களுக்கு முன்பே நிரம்பி உபரி தண்ணீர் வழிந்தோடி அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதையடுத்து அந்த உபரி தண்ணீரை மழை நீர் கால்வாயில் வெட்டி விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

uL6fcxPS8AXKsU5FoEvw

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, சிறப்பு அதிகாரி அமுதா ஆகியோர் அந்த பணியை பார்வையிட்டனர். இந்த நிலையில் நேற்றும், இன்றும் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் நாரயாணபுரம் ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.

இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை விட்டு, விட்டு மழை பெய்ததால் அலுவலகம் செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். சென்னையில் 7 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறந்ததால், மாணவர்களின் வாகனங்களும் மழையில் சிக்கி மெதுவாக சென்றன.

இதனால் சென்னையில் இன்று காலை முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Response