செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது என்ற வதந்தியை நம்பாதீர்கள்: தமிழ்நாடு வெதர்மேன்

download 11

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது உடையப் போகிறது என்று வதந்தி பரவுவதை நம்பாதீர்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை வலுத்துவரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டதாக சிலர் வதந்தி கிளப்பி விடுகின்றனர். வாட்ஸ் அப்பில் தீயாக தகவல் பரவி வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அதிக அளவு மழைப் பொழிவு காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஏரி உடையாமல் இருக்க திறந்து விடப்பட்டதில் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து முடங்கியது.

இதனால் மழை அதிகம் பெய்தாலே பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு சில விஷமிகள் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிவதாகவும், உடைப்பு ஏற்படும் முன் திறந்து விடலாம் என்றும் வதந்தி பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இது முற்றிலும் வதந்தியே யாரும் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது முகநூல் பதிவு வருமாறு:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழை வலுவாக பெய்து வருகிறது. இதைக் காரணமாக வைத்து மக்களை பீதியில் ஆழ்த்தும் வகையில் ஒருசிலர் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவிட்டது, உடையப்போகிறது எனவெல்லாம் புரளியை கிளப்புகிறார்கள்.

அப்படி வரும் செய்திகள் எதையும் மக்கள் நம்பவேண்டாம். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி, ஆனால், தற்போது 679மில்லியன் கனஅடியே இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 20 சதவீதம் மட்டுமே. ஆதலால் ஏரி குறித்த பொய்யான தகவல்களை நம்பாதீர்கள்.

இதுபோன்ற வதந்திகளையும், புரளிகளையும் உருவாக்கி, பரப்பி, மக்களிடம் அச்சத்தை உண்டாக்குபவர்களை சைபர் கிரைம் போலீஸார் தேடிவருகிறார்கள். மக்களை இப்படி அச்சத்திலும், வேதனையிலும் ஆழ்த்தி, ஒரு விதமான பீதியை பரப்பி அதன்மூலம் அந்த நபர்கள் எந்தவிதமான இன்பத்தை அடைகிறார்கள் எனத் தெரியவில்லை.

இதுபோன்ற செய்திகள் உங்களுக்கு எஸ்.எம்.எஸ். , வாட்ஸ்அப் மூலம் வந்தால், மற்றவர்களுக்கு இதை அனுப்பும் முன், அணைகளின் நீர்மட்டம், ஏரிகளின் நீர் மட்டம் ஆகியவற்றை சென்னையில் உள்ள மெட்ரோ நீர் இணையதளத்தில் சென்று ஆய்வுசெய்து, உறுதி செய்தபின் மற்றவர்களுக்கு அனுப்புங்கள்.

இவ்வாறு பிரதீப் ஜான் பதிவு செய்துள்ளார்.

Leave a Response