பாஜக – சிவசேனா மோதல் சூழலில் மம்தா பானர்ஜியுடன் உத்தவ் தாக்ரே சந்திப்பு

DNoHy8fUEAEm1l9

பாஜகவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே எதிர் அணியைச் சேர்ந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா சமீபகாலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அக்கட்சி பத்திரிகையான சாம்னாவில் பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வெளிவருகின்றன.

சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான சஞ்சய் ரவுத் ”நாடு முழுவதும் வீசிய மோடி அலை தற்போது மங்கிவிட்டது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாட்டை வழிநடத்த தயாராகி விட்டார்” என கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ”கூட்டணியில் தொடருவதா? அல்லது வெளியேறுவதா? என்பதை அக்கட்சி முடிவு செய்ய வேண்டும்” என கூறினார். இதனால் இரு கட்சிகள் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.

DNn9JEvV4Akp1am

இந்த சூழலில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை மும்பையில் சந்தித்துப் பேசினார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதற்காக நாடுமுழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார்.

இந்தசூழலில், உத்தரவ் தாக்ரே, மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response