வெள்ளக்காடானது நாகை மாவட்டம்: மக்கள் கடும் அவதி!

30796

ஒரே நாளில் கொட்டிதீர்த்த மழையால் நாகை மாவட்டம் வெள்ளக்காடானது. இதனால்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் காவிரிகடைமடை பகுதியாக இருக்கக்கூடிய நாகை மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக காவிரிநீர் உரிய நேரத்தில் கிடைக்காததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்துபோன நிலையில் கடந்த ஆண்டு காவிரி நீர் வராததாலும், பருவமழை பொய்த்து போனதால் சம்பா சாகுபடியும் முற்றிலும் பாதப்படைந்தது. இந்த ஆண்டு கடந்த 2ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்தும். அணையில் 95 அடிக்கு மேல் தண்ணீர் இருந்ததால் எப்படியும் சம்பா சாகுபடியை செய்துவிடலாம் என்று கடைமடை பகுதி விவசாயிகள் கடந்த மாதம்  முதல் வாரத்தில் விதை விட்டு காவிரிநீர் வந்தடைந்ததும் வயலை உழவுசெய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடவு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டனர்.

30799

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இடைவிடாது கனமழை பெய்ததால் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய செம்பனார்கோவில், மேமமாத்தூர், காளகஸ்திநாதபுரம், ஆக்கூர், மேட்டூர் அணை திறந்து 20 நாட்கள் கழித்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காவிரிநீர் எட்டிப்பார்த்தது. பம்புசெட் வைத்திருக்கக்கூடிய விவசாயிகளிடம் தண்ணீர் பெற்றுவிதைவிட்டு நாற்றுகளை தயார் செய்தோம். காவிரிநீர் வந்ததும் வயலை உழவு செய்து கடந்த 10 நாட்களாக முழுவீச்சல் சம்பா நடவு பணிகளை மேற்கொண்டோம். பயிர்கள் பச்சை பிடிக்க தொடங்கிய நிலையில் நேற்று ஒரேநாளில் பெய்த கனமழையால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இன்னும் இரண்டு தினங்களுக்கு மழைநீடிக்கும் என்று வானிலை தகவல் மையம் எச்சரித்துள்ளது.

மழை நீரை வடிகட்டுவதற்கு ஆறு மற்றும் வடிகால்கள் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததால் தண்ணீர் வடிவதற்கு வழியின்றி வயல்களில் தேங்கி நிற்கிறது.  வடிகால் வாய்க்கால்களை அரசு முறையாக தூர்வாரி இருந்தால் இதுபோன்ற பிரச்னை வந்திருக்காது. பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை இயற்கையும் வஞ்சிக்கிறது. இவ்வளவு காலமாக வறட்சியால் பாதிக்கப்பட்டோம். தற்போது மழை தேவை என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஒரே நாளில் மழை கொட்டி தீர்த்ததால்  சம்பா பயிர்கள்  பாதிப்படைந்துள்ளது. இன்னும் ஒரு சில தினங்களுக்கு மழை நீடித்தால் நீரில் மூழ்கிய இளம் பயிர்கள் கரைந்து முற்றிலும் அழுகிவிடும் இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்றனர்.

gallerye_004535112_121865

 

தரங்கம்பாடி வட்டத்தில் திருக்கடையூர், அர்த்தஜாமகட்டளை,  காலமநல்லூர் காழியப்பநல்லூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், திருவிடைகழி,  திருவிளையாட்டம், ஈச்சங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி  செய்யபட்டிருந்த பயிர்கள் கடந்த 2 தினங்களான பெய்து வரும் தொடர் மழையில்  மூழ்கி கிடக்கின்றன. வடிகால் தூர் வாராததால் தண்ணீர் வடியாமல் இருப்பது  விவசாயிகளுக்கு கவலை அளிக்கின்றது. இது குறித்து ஈச்சங்குடி விவசாய சங்க  தலைவர் துரைராஜ் கூறியதாவது. கடந்த 2 நாட்கள் பெய்த மழைக்கே பயிர்கள்  மூழ்கி விட்டன. வடிகால் இல்லாததே இதற்கு காரணம். வடிகால்களை தூர் வார  வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம்,  பொதுப்பணிதுறை, வேளாண்மைதுறை, ஆகிய துறையை சேர்ந்த அதிகாரிகள் அலட்சியம்  காட்டியதன் காரணமாகவே பயிர்கள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை  பெய்தால் விவசாயிகளுக்கு மிக ெபரிய பாதிப்பு ஏற்படும். விவசாயிகளும்  அலட்சியம் காட்டாமல் அரசை நம்பி இல்லாமல் தங்கள் பகுதியில் உள்ள   வடிகால்களை வெட்டி சீரமைக்க முன் வர வேண்டும். அப்போது தான் விவசாயிகள் இது  போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருக்கலாம் என்று தெரிவித்தார்.

130129165120_paddy_fields_flooded_512x288_bbc_nocredit

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில்  பாசன ஆறு மட்டும் வடிகால் வாய்க்கால் போன்றவற்றை முழுமையாக தூர்வாரவில்லை.  மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தாலுகாக்களில் காவிரி ஆற்றின் தண்ணீரை  கொண்டு விவசாயம் செய்து பல வருடங்களாகிவிட்டது. நிலத்தடி நீரைக்கொண்டுதான்  குறுவை, தாளடி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அருகே உள்ள  மணல்மேடு வக்காரமாரி, முடிகண்டநல்லூர், வல்லம், அகரமணல்மேடு,  இலுப்பப்பட்டு, பாப்பாக்குடி போன்ற  பகுதிக்கு வடிகால் ஆறாக இருப்பது  ராஜன்வாய்க்கால்.  இந்த வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் தூர் வாராதததால்  ஆற்றில் நெய்வேலி காட்டாமணக்கு, ஆகாய தாமரை போன்றவைகள் மண்டிக்கிடக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இந்த வடிகால் ஆறு தண்ணீரை உள்வாங்காததால்  விவசாய நிலத்திலேயே தங்கி பயிரை அழுக செய்து விடுகிறது. இந்த ஆண்டு அதை  தவிர்க்க வக்காரமாரியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றுதிரண்டு பொதுப்பணித்  துறையினரிடம் மனு ஒன்றை அளித்தனர். ஆறு தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தார். ஆனால்  தேவையான அளவு தூர்வாராமல் அப்படியே  விட்டுவிட்டனர்.  இதன் விளைவாக கடந்த 2 தினங்களாக பெய்த மழை நீர் வயலில்  தேங்கியது.  நாற்று நட்டு 20 தினங்களே ஆன நிலையில் தண்ணீர் 2 அடி அளவில்  மூழ்கியுள்ளது, சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது. இதனால்  விசாயிகள் வேதனையடைந்துள்ளனர். வடிகால் வாய்க்காலான ஊசிவாய்க்கால் நிரம்பி  வழிவதால் வயல்பகுதியில் உள்ள தண்ணீர் வடியாமல் உள்ளது.  பொதுப்பணித்துறையினரிடம் கூறியதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை, ராஜன்  வாய்க்காலில் தண்ணீர்விடுவதை நிறுத்தினால் ஓரளவிற்கு இந்த மழைநீர் வடிய  வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வக்காரமாரி குணசேகரன் என்பவர் கூறுகையில்,  ஏற்கனவே விவசாயிகளே ராஜன் வாய்க்காலை தூர்வாரினர், ஒழுங்காக இருந்தது,  தற்போது பொதுப்பணித்துறையினர் துர்வாரி வருவதால் முழுமையாகவும், உரிய  முறையிலும் தூர்வாருவது கிடையாது, பொதுப்பணித்துறையினர் ஆறுகளை  தூர்வாருவதற்கு ஆற்றில் தண்ணீர் எப்போது திறந்து விடுவார்களே அந்த வேளையில்  தூர்வார வருகின்றனர், தண்ணீர் வந்ததும் வேலையை அப்படியே விட்டுவிட்டு  சென்று விடுகின்றனர். ஆகவே ராஜன் வாய்க்காலின் வரத்தை நிறுத்திவிட்டு இந்த  மழைநீரை வடியவைக்க வேண்டும், வரும் காலத்தில் ஆறுகளை தூர்வாரும் பொறுப்பை  விவசாயிகளிடமே விட்டுவிடவேண்டும் என்றார்.

Leave a Response