உச்சத்தைத் தொட்ட இந்திய பங்குச்சந்தை! இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வு.

SENSEX

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 33,451 புள்ளிகளும், நிஃப்டி 10,400 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 238.16 புள்ளிகள் உயர்ந்து 33,451.29 புள்ளிகளாக உள்ளது. வங்கி, எஃப்எம்சிஜி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.36% வரை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67.85 புள்ளிகள் அதிகரித்து 10,403.15 புள்ளிகளாக உள்ளது.

பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் பாங்க், எஸ்.பி.ஐ மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவன பங்குகள் விலை 3.69% வரை உயர்ந்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.28%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.66% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 1.42% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.12% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்வு:

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.64.63 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை சரிந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் அதிகரித்து ரூ.64.75 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response