உணவகங்கள்; ஜி.எஸ்.டி. வரி குறைப்பு; மாநில நிதிமந்திரிகள் குழு பரிந்துரை…

News-3-2
நேற்று டெல்லியில் நடந்த மாநில நிதிமந்திரிகள் குழு கூட்டத்தில் உணவுப் பொருட்கள் மீது வரியை குறைப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இந்த குழு தெரிவித்தது.

ஜி.எஸ்.டி.யில் ‘காம்போசிட்‘ திட்டத்தை எளிமைப்படுத்த அசாம் மாநில நிதி மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் மாநில நிதிமந்திரிகள் குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. இந்த குழுவின் 2-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அப்போது உணவுப் பொருட்கள் மீது வரியை குறைப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இந்த குழு தெரிவித்தது.

தற்போது ஜி.எஸ்.டி.யின் காம்போசிட் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை வருவாய் ஈட்டும் உணவு பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு ஜி.எஸ்.டி.யின் கீழ் 2 சதவீதமும், உணவகத்தினருக்கு 5 சதவீதமும், வர்த்தகர்களுக்கு 1 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. இதில் 1 சதவீத வரியை தயாரிப்பாளர்களுக்கும், உணவகத்தினருக்கும் குறைக்க நிதிமந்திரிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதேநேரம் காம்போசிட் திட்டத்தின் கீழ் வராத ஏசி வசதி மற்றும் ஏசி வசதி இல்லாத உணவகங்களுக்கு இடையே உள்ள வரி வித்தியாசத்தை கைவிட்டு, ஒரே சீராக 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதிக்கலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

மேலும் அறை வாடகை ரூ.7,500க்கும் மிகாத விடுதிகளின் உணவகங்களில் ஒரே சீராக 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதிக்கவும் இந்த குழு பரிந்துரைத்து இருக்கிறது.

Leave a Response