நவம்பர் 2-ல் களைகட்டப்போகும் உயர்நீதிமன்றம்..! நான்கு முக்கிய வழக்குகள் விசாரணை..!

 

chennai_HC

துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மற்றும் உரிமைக்குழு நோட்டீஸிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு ஆகியவற்றை வரும் நவம்பர் 2-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அரசு கொறடாவின் உத்தரவை மீறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பழனிசாமிக்கு எதிராக வாக்களித்ததால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரசியல் சாசனம் தொடர்பான வழக்கு என்பதால், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தகுதிநீக்கம் செய்யக்கோரிய 11 எம்.எல்.ஏக்களில் ஒருவரான செம்மலை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக்கோரிய வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்த வழக்கின் விசாரணை நடைபெற இருக்கும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தது.

அதேபோல், சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச்சென்றதற்காக ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸிற்கு எதிராக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கும் நவம்பர் 2-ம் தேதியே விசாரிக்கப்படும் என உத்தரவிட்டது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய வழக்கு மற்றும் உரிமைக் குழு நோட்டீஸிற்கு எதிரான வழக்கு என 4 முக்கியமான வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே அன்றைய தினம் உயர்நீதிமன்றம் களைகட்டும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Response