உதவாக்கரை அரசு- சென்னைக்கு மிக பெரிய ஆபத்து!

haasan

கமல்ஹாசன் டிவிட்டர் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அரசியல் கட்சியினர் சிலர் விமர்சனம் செய்தாலும், அவர் தொடர்ந்து, டிவிட்டர் மூலம் தனது  கருத்தை வெளிப்படுத்திக்  கொண்டே இருக்கிறார். நேற்று தனது கட்சியின் பெயரை ஊடக உந்துதல் காரணமாக எல்லாம் தெரிவிக்க முடியாது என்று பட்டென்று பின்வாங்கினார். இந்நிலையில் இன்று காலை தனது சமூக நோக்கத்தை உணர்த்தும் வகையில் ஒரு டிவிட் செய்திருக்கிறார். அதில், கொசஸ்தலை ஆற்றின் நிலவரத்தைக் கூறி கழிமுகத்துக்காக கழிவிரக்கம் கொண்டு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க ஒரு வாய்ப்பு என்று முன்னோட்டமாக அவர் அரசுக்குக் கூறியுள்ள யோசனை…

தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழுவிவரம் கீழே …

kosathalai

கொசஸ்தலை ஆறு சென்னைக்கு அருகே இன்னும் முழுவதும் சாக்கடை ஆகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றை விட பல மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தில் உள்ள 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச் சூழல் சிந்தனையில்லாத சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் நாம் இழந்துவிட்டோம். வல்லூர் மின் நிலையமும் வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டுகின்றன.

இதை எதிர்த்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாகப் போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான். பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணை முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன.

kamal tw1kamal tw2

காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விப் படுகிறேன். நில வியாபாரிகளுக்குக் கைகொடுக்கும் முன்னுரிமையையும் உதவியையும் ஏழை மக்கலுக்குக் கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள்தான். வழக்கமாக வரும் மழை போன வருடம் போல் பெய்தாலே வடசென்னைக்கு ஆபத்து….

சென்னை- காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும்.

– என்று அவரது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார் கமல்ஹாசன்.

Leave a Response