தினகரன், புகழேந்தி மீதான தேசத்துரோக வழக்கு; ஒரு வாரம் அவகாசம் கேட்ட அரசு தரப்பு!

தினகரன், புகழேந்தி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

கடந்த மாதம் பெரியார், அண்ணா பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்ட தினகரன் அணி சார்பில் துண்டுப் பிரசுரம் ஒன்று அச்சடித்து விநியோகிக்கப்பட்டது. அதில், நீட்டுக்கு எதிரான வாசகங்களும் நீட்டை அமல்படுத்திய மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எதிரான வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், சசிகலா மற்றும் தினகரனை வாழ்த்தி, வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ’கட்சியில் களையெடுப்பு தொடரும்’ என்றும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரை அவமதிக்கும் வகையில், சேலத்தில் நோட்டீஸ் விநியோகித்ததாக டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி உள்ளிட்ட 14 பேர் மீது சேலம் போலீஸார் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

Madras-High-Court-LL-Size-min

தங்கள் மீது போடப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தினகரன், புகழேந்தி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது குறித்து அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீட் தேர்வானது உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்தே தமிழகத்தில் நடத்தப்பட்டது. மேலும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில், அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலும், தீர்ப்புக்கு எதிராகவும் நோட்டீஸ் வழங்கியதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவே தினகரன், புகழேந்தி உள்ளிட்டவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு நீதிபதி, தினகரன் தரப்பில் வழங்கப்பட்ட நோட்டீஸில் அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் எதுவும் இடம்பெறவில்லையே என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்க ஒருவார காலம் அவகாசமளிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரினார். அப்போது குறுக்கிட்ட தினகரன், புகழேந்தி தரப்பு வழக்கறிஞர் அரசு தரப்புக்கு அவகாசம் அளித்தால், அதுவரை சேலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இந்தநிலையில், அரசின் தலைமை வழக்கறிஞரை நேரில் ஆஜராகி நாளையே விளக்கமளிக்க சொல்வதாக அரசு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

Leave a Response