இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்; புதுக்கோட்டை மீனவர்கள் ஐந்து பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு!

_10209
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மீன்துறை அலுவலக அனுமதியுடன் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 160 விசைப் படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது.

Sri_Lankan_Navy-EPS

இதனை பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் அச்சத்துடன் அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதில் ஜான்பீட்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். இந்த பகுதியில் மீன் பிடிக்க கூடாது என பல முறை எச்சரித்தும் எந்த தைரியத்துடன் வந்தீர்கள் என்று கூறி திட்டியுள்ளனர்.

பின்னர் அந்த படகில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களை அபரித்துக்கொண்ட இலங்கை கடற்படையினர் மீனவர்கள் இன்னாசி (வயது 40), ஜெமினி (42), கருப்பசாமி (47), பூமி 52), சுதாகர் (19) ஆகிய 5 மீனவர்களையும் கைது செய்தனர்.

மேலும் மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள காரை நகர் துறைமுக காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இன்று பிற்பகலில் அங்குள்ள கோர்ட்டில் புதுக்கோட்டை மீனவர்கள் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரியவரும்.

கடந்த சில மாதங்களாக சிறைப்பிடிப்பு சம்பவங்கள் இல்லாமல் புதுக்கோட்டை மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response