இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவி, பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மருமகள் என்கிற அடையாளங்களுக்கு சொந்தக்காரர் ஐஸ்வர்யா!
இவர் படத் தயாரிப்பாளரும்கூட! ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் படங்கள் இவர் தயாரித்தவை, வசூல் குவித்தவை!
வெற்றிப் பட தயாரிப்பாளரான ஐஸ்வர்யா இப்போது திரைப்படங்களில் பாடவும் துவங்கியுள்ளார்.
சமீபத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் பாடி அசத்தியுள்ளார்.
ஐஸ்வர்யா பாடல் பாடிய படத்தின் இயக்குநரும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் ஐஸ்வர்யாவின் குரல் வளத்தை பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியான செய்தியை நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஐஸ்வர்யா,
” எனக்கு ஊக்கமளித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இசையில் பாடியது எனக்கு பெரும் பெருமை. தமிழில் ‘கூத்தன்’ என்ற படத்திலும் பாடியுள்ளேன். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எனது உச்சரிப்பு சரியாக இருப்பது பெரும் பலமாக உள்ளது. ‘தொடர்ந்த பயிற்சி திருவினையாக்கும்’ என்பதை நம்பும் நான் பின்னணி பாடகியாகவும் ஒரு முத்திரை பதிப்பேன்” என்கிறார்.