தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கிறார்.

 

தமிழகத்தின் புதிய, 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நாளை பதவியேற்கவுள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழக கவர்னராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில கவர்னராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.
31057

அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி தமிழக பொறுப்பு கவர்னர் என்ற கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், குட்கா பிரச்சினை, சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்துக்கு முழு நேர கவர்னரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து அசாம் மாநில கவர்னராக பணியாற்றிய பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ஆம் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்றுக் கொள்கிறார். இதற்காக அவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோரும் வரவேற்கின்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு பன்வாரிலால் புரோகித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Leave a Response