‘விவேகம்’ பட டிக்கெட் விலை ₹ 800லிருந்து 1500! நேர்மையாளர் அஜித் என்ன செய்யப் போகிறார்?

ajith-vivegam-3
அஜித்தின் ‘விவேகம்’ ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. இன்னும் பத்து மணி நேரத்தில் அதிகாலை ஸ்பெஷல் ஷோவுக்கும் சில தியேட்டர்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

தியேட்டர் எங்கிருக்கிறது, கவுண்டர் எங்கிருக்கிறது என்று தெரியாதபடிக்கு கட் அவுட்களால் நிறைத்துக் குவித்து பெரும் கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டார்கள் தல ரசிகர்கள்.

இதுவரை வந்த அஜித் படங்களிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட மிக பிரமாண்ட படம், தமிழின் முதல் உளவுத் திரில்லர் கதை, ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்களிப்பு என படம் பற்றி ஏகத்துக்கும் பில்ட் அப் களை அள்ளி வீசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துவிட்டது படத்தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ்!

படம் மட்டுமல்ல தியேட்டர்களில் டிக்கெட் விலையும் பிரமாண்டம்தான். ஆம், சென்னை தியேட்டர்களில் புக்கிங் தொடங்கியபோதே ரூ. 150க்கான டிக்கெட் 500 வரை விற்கப்படுவதாக தகவல் வந்தது. சமீபகாலமாகவே இப்படி தியேட்டர் நிர்வாகமே விலையேற்றி விற்பது தொடர்கதையாகி விட்டது.

ரூ. 150க்கான டிக்கெட்டை 500க்கு விற்பதே கொடுமை, நடுத்தரக் குடும்பத்து ரசிகனின் உழைப்பை உறிஞ்சும் செயல். அதைத் தாண்டி, நாளை படம் ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று காலை முதலே தியேட்டர்களில் ரூ.1000 முதல் 1500 வரை பிளாக்கில் டிக்கெட்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து கொண்டிருக்கிறது.

தாம்பரம் அருகிலுள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட்டுகான கட்டணமாக கேட்ட ரூ.500 கொடுத்தும் டிக்கெட் தராததால் ரசிகர்கள் ஆவேசமாகி ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்னர் போலீஸ் வந்து தலையிட்டு பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கண்டதாக செய்திகள் வந்தது!

சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் டிக்கெட் ரூ.1000த்திலிருந்து ரூ.1500 வரை விற்கப்படுவதை நாமே நேரில் பார்க்க முடிந்தது.

ஜி.எஸ்.டி. விவகாரம் மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி தொடர்பாக, சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அபிராமி ராமநாதன் தலைமையில் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்கள். அப்போது, தியேட்டர்களில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக விலைக்கு டிக்கெட் விற்பது, பிளாக்கில் கல்லா கட்டுவது, பாப்கார்ன் – பைக் பார்க்கிங்கில் கட்டணக் கொள்ளை என தியேட்டர்கள் மனசாட்சியில்லாமல் லாபம் பார்ப்பது குறித்து காரசாரமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக செய்தி வந்தது!

என்ன கண்டனம் தெரிவித்து என்ன பயன்?

தியேட்டர் அதிபர்கள் இது பற்றியெல்லாம் கண்டுகொள்ளவில்லை என்பதையே இன்றைய நிகழ்வுகள் காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ய வாய்ப்பில்லாமல் போகக்கூடும். சிறு முதலீட்டில் தயாராகும் படங்களும் பாதிக்கப்படும். அப்படியான படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

அஜித் பொறுத்தவரை, ‘எதிலும் நேர்மையானவர்’ என்ற பிம்பத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது ரசிகர்கள் அளவுக்கு மீறி கட் அவுட்கள் வைத்து காசைக் கரியாக்குவது குறித்தோ, தியேட்டர்களில் தன் படத்துக்கு கொள்ளை விலை வைத்து டிக்கெட் விற்பனை செய்யப்படுவது குறித்தோ மூச் விடுவதில்லை!

இப்போது ‘விவேகம்’ பட டிக்கெட் விற்பனை புகார் பெரியளவில் எழுந்துள்ள நிலையில் நேர்மையாளர் அஜித் என்ன செய்யப் போகிறார் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது!

விவேகம் டிக்கெட் விற்பனை குறித்து தமிழ்நாடு முழுக்க பரவலாக புகார் எழுந்தும், தொலைக்காட்சி, இணையதளம் போன்ற ஊடகங்களில் செய்தி வெளியான பிறகும் இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பது, படத் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது!

Leave a Response