Thambi ramaiya’s laugh riot:

காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து உருவாகும் “உ”:

ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்க, அவருடன் பல புதுமுகங்கள் நடிப்பில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் படம்  ‘உ’. விசுவல் கம்யூனிகேசன் மற்றும் சென்னை எம்.ஜி.ஆர் பிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்கம் பயின்ற ஆஷிக்  ‘உ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தனது பல குறும்படங்களுக்காக இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாடுகளிலும் விருதுகள் பெற்றிருக்கும் ஆஷிக்கின் முதல் வெள்ளித்திரைப் படமாக ‘உ’ வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் நிறைய புதுமுகங்களுடன் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இதுவரை பார்த்திராத ஒரு புதிய தோற்றத்தில் தம்பி ராமையா நடித்துள்ளார். சுந்தரபாண்டியன் படத்தில் மிரட்டிய சௌந்தரராஜா, சூப்பர் சிங்கர் ஜூனியர் டைட்டில் வின்னர் ஆஜித், வருண், மதன் கோபால், ‘ஸ்மைல்’ செல்வா, சத்யசாய், ராஜ்கமல், காளி, ராஜசிவா, தீப்ஸ், மதுமிதா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆனால் இன்னும் நாயகி யார் என்பதை முடிவு செய்யவில்லை. 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் ஆஷிக் பேசுகையில், “தலைப்புக்கு அர்த்தம் பிள்ளையார் சுழி என்பதுதான். இந்தப் படத்தின் ஹீரோ பெயர் கணேஷ். ஹீரோ வேறு யாருமல்ல, தம்பி ராமையாதான். அவர் ஒருவர்தான் இந்த வேடத்தைச் செய்ய முடியும். அதனால் அவரை ஒப்பந்தம் செய்தோம். முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து இந்தப் படத்தை இயக்குகிறேன்,” என்றார்.

படத்துக்கு இசை அபிஜித் ராமசாமி, ஒளிப்பதிவு ஜெயப்பிரகாஷ். பாடல்களை எழுதி தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கிறார் முருகன் மந்திரம்.