கூகுளின் அடுத்த ஸ்மார்ட்போன் அட்டாக்: என்னனு தெரிஞ்சுக்கனுமா உள்ள போய் படிங்க…

google13223_18039
தேடுதல் இயந்திரம், ஆண்ட்ராய்டு என மென்பொருள் துறையில் கலக்கிக்கொண்டிருந்த கூகுள், பின்னர் ஸ்மார்ட்போன் சந்தையிலும் களமிறங்கியது. பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL போன்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை, கூகுள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தியது. விலையிலும் தரத்திலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு இணையானதாக, பிக்ஸல் ஸ்மார்ட்போன் கருதப்படுகிறது.

பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த மாடல்களான பிக்ஸல் 2 மற்றும் பிக்ஸல் XL 2 ஸ்மார்ட்போன்களை கூகுள் விரைவில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் பிக்ஸல் XL 2 ஸ்மார்ட்போனின் ஸ்பெசிஃபிகேஷன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முந்தைய மாடலைவிட இதில் லேட்டஸ்ட் வசதிகள் பலவும் இடம்பெற்றுள்ளன.

பிக்ஸல் XL 2 மாடலில் Snapdragon 835 பிராஸசர் இடம்பெறும் எனத்தெரிகிறது. இதனால் வேகமான செயல்திறன் கொண்ட மொபைலாக இது இருக்கும். பின்பக்க கேமரா 13 மெகா பிக்சல் திறனும், முன்பக்க கேமரா 8 மெகா பிக்சல் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இரண்டு கேமராக்களும் 4K ரெசொல்யூசன் கொண்ட வீடியோக்கள் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பு. செல்பி பிரியர்களை மனதில் வைத்துத் தற்போது டூயல் கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதிகம் சந்தைக்கு வருகின்றன. பிக்ஸல் ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா வசதி இடம்பெறுமா என்பதைப்பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சந்தைக்குப் புதிய வரவான 18:9 ரெசொல்யூசன் டிஸ்ப்ளே கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கத்தைவிடவும் அதிக ரெசொல்யூசன் கொண்ட டிஸ்ப்ளேயாக பிக்ஸல் மொபைல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 4 GB RAM இருப்பதால், ஸ்ட்ரக் ஆகும் பிரச்னை இந்த மொபைலில் இருக்காது. முந்தைய பிக்ஸல் XL மொபைலைப் போலவே இதிலும் 128 GB வரை இன்டர்னல் மெமரி இடம்பெறும். இந்த இன்டர்னல் மெமரி அதிகம் என்பதால், மெமரி கார்டு ஸ்லாட் இதில் இடம்பெறாது எனக்கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் புதிதாக வெளியிடும் ஸ்மார்ட்போனில், பொதுவாக ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் இடம்பெறும் என்பதால், பிக்ஸல் 2 மற்றும் பிக்ஸல் XL 2 மாடல்களில் ‘ஆண்ட்ராய்டு – ஓ’ ஆபரேட்டிங் சிஸ்டம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் மற்றும் தூசி புகாத அளவுக்கு இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த ஒளியிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்கக்கூடிய அளவுக்கு இதன் இருபக்கக் கேமராக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஐபோன் 7 மாடலைப் போல இதிலும் 3.5 MM ஆடியோ ஜாக் இடம்பெறாது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. பிக்ஸல் 2 மாடலை விடப் பெரிய டிஸ்ப்ளே மற்றும் பேட்டரித் திறன் கொண்டதாக பிக்ஸல் XL 2 மாடல் இருக்கும்.

ஜிகாபைட் வைஃபை மற்றும் ப்ளூடூத் 5.0 போன்ற லேட்டஸ்ட் வசதிகளுடன் வரவிருக்கும் இந்த மொபைலை, கூகுள் நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடவுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான பிக்ஸல் மொபைலின் குறைந்தபட்ச விலை 57,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. எனவே, பிக்ஸல் 2 மற்றும் பிக்ஸல் XL 2 மாடல்களின் விலை இதைவிட அதிகமாக இருக்கும்.

Leave a Response