தடுப்பு சுவர் கட்டுவதால் கடல் ஆமைகளுக்கு ஆபத்து: தனுஷ்கோடி…

amaigal
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ் கோடியில் கட்டப்படும் தடுப்புச் சுவரால் கரையில் வந்து முட்டை யிடும் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடல் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் கடல் ஆமைகளின் பங்கு முக்கியமானது. மேலும், மீன் குஞ்சுகளை உணவாக உட் கொண்டு மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உணவாக உட்கொள்கின்றன. இதன் மூலம் மீன்வளம் காக்கப்படுகிறது. ஆனால், பருவநிலை மாற்றம், கடல் மாசுபாடு, தடை செய்யப்பட்ட மீன் பிடித்தல் ஆகியவை கடல் ஆமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் ஆமை இனப்பெருக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 90 இடங்களில் ஆண்டுதோறும் ஜன. 1 முதல் ஏப். 30 வரை விசைப்படகுகள், வெளியே இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளிட்டவை மூலம் கரையிலிருந்து 5 கடல் மைல் (9.26 கி.மீ.) தொலைவுக்கு, மீன் பிடிக்கத்தடை விதித்து தமிழக அரசு கடந்த ஆண்டு செப். 27-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான், ஏர்வாடி, சேதுக்கரை, புதுமடம், மண்டபம், அரியமான் அழகன், ஆற்றங்கரை, புது வலசை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் கண்டறியப்பட்டன.

இந்நிலையில், தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் மற்றும் அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் கரையில் வந்து முட்டையிடும் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுர மாவட்ட வனத்துறை அதிகாரி கூறியதாவது:-

தமிழகத்தில் ஆமை அதிகளவில் முட்டையிடக் கூடிய பகுதிகளில் ஒன்றாக தனுஷ்கோடி கடலோரப் பகுதி உள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் 13 ஆயிரம் ஆமை முட்டைகள் கண்டெடுக்கப்பட்டு, அவை முகுந்தராயர் சத்திரத்தில் உள்ள ஆமைக் குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு, பின்னர் முட்டையிலிருந்து ஆமை வெளியே வந்ததும் கடலில் விடப்படுகிறது.

முகுந்தராயர் சத்திரத்தில் கடல் அரிப்புக்காக எழுப்பப்படும் தடுப்புச் சுவரால் கரையிலிருந்து மணற்பகுதி குறைந்து ஆமைகள் முட்டை இடுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றார்.

இதுகுறித்து கோட்ட நெடுஞ் சாலைத்துறை அதிகாரியிடம் கேட்டபோது:-

தனுஷ்கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையை கடல் அரிப்பிலிருந்து காத்திட ரூ. 11 கோடி செலவில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. ஆமைகளை பாதுகாக்க வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

தனுஷ்கோடி கடற்கரையில் முட்டை பொரிக்கப்பட்டு வெளிவந்த நிலையில் கடலுக்குச் செல்லும் ஆமைக் குஞ்சு.

Leave a Response