வெயிலின் தாக்கத்தினால் பாபநாசம் நீர்மட்டம் 21 அடியாக சரிந்தது…

papanaasam
எப்பொழுது வெயிலின் தாக்கம் குறையும் என்று பார்த்தால் அது குறையும் வண்ணம் இல்லை. எனவே வெயில் காரணத்தால் தண்ணிர் வறட்சி வரும் என்று பயம் மக்களின் மனதில் எழுந்துள்ளது. அதன் விளைவாக பாபநாசம் நீர்மட்டம் 21 அடியாக சரிந்தது.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் பெய்த லேசான மழை காரணமாக இன்று வரை குடிநீருக்கு மட்டுமே அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. எனினும் கடந்த மார்ச் முதல் கடுமையான வெயில் கொளுத்துகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 21.15 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வெறும் 2 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 104 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 38.52 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 12 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு தாமிரபரணி ஆறு தான் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் இருந்து தினமும் 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது 21 கன அடி மட்டுமே நீரிருப்பு உள்ளதால், பாபநாசம் அணையில் இருந்து மட்டும் 200 கன அடி தண்ணீர் திறந்தால் இன்னும் ஒரு வாரத்திற்கு கூட தாக்குப் பிடிக்காது. எனவே அதை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு, பாபநாசம் அணையில் இருந்து தலா 100 கன அடி தண்ணீர் என்ற பகிர்வு அடிப்படையில் திறக்கப்பட்டு வருகிறது.
எனினும் வருகிற ஜூன் 1ம் தேதி குறித்த காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மட்டுமே குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியும். இல்லையெனில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது.

Leave a Response