இன்று புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்…

Puducherry-Assembly
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பெடி சட்டசபையில் உரையாற்றினார். கடந்த 17-ந் தேதி சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் 23-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் மீண்டும் சட்டசபை இன்று (புதன்கிழமை) கூடுகிறது. அப்போது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் துவங்கியது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டம்:-

இந்த நிலையில், புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினெட் அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, அரசு செயலர் நரேந்திரகுமார், கந்தவேலு, பாபு, சுந்தரவடிவேலு, மிகிர்வர்தன், ஜவகர், மணிகண்டன், அருண் எல்.தேசாய், செந்தில்குமார், புதுவை கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பட்ஜெட் இடம் பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது, புதிதாக எந்தெந்த திட்டங்களை கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னதாக புதுவையின் முன்னாள் முதல்-அமைச்சர் ராமசாமியின் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Response