80 வயது மூதாட்டியாக நடிக்கவிருக்கும் பாலிவுட்டின் ‘குயீன்’ கங்கனா ரனாவத்…

kangana-ranaut
பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கங்கனா ரனாவத் பாலிவுட்டில் தனித்துவம் மிகுந்த நாயகியாக திகழ்ந்து வருகிறார். தனது அதிரடி நடிப்பின் மூலம் 2 முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்ற கங்கனா தற்போது திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.

கங்கனாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ‘தேஜு’ திரைப்படத்தை, தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க முதியவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படமாக நகைச்சுவை பாணியில் உருவாகிவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கங்கனா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறு வயது முதலே தாத்தா, பாட்டியுடன் வளர்ந்ததால், அவர்களின் சுக துக்கங்களை நன்கு அறிவேன். எனது முதல் இயக்கத்தில் உருவாகும் தேஜு படத்தில் 80 வயது மூதாட்டியாக நடிக்கிறேன். எனது கதாப்பாத்திரமும், படமும் அனைவருக்கும் பிடிக்கும்’ என கூறியுள்ளார்.

இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் மிகவும் துடிப்பாக இருக்கும், தனக்கு 80 வயது ஆகிவிட்டது என்பதை உணராமல் மனதில் இளமை துடிப்புடன் இருக்கும் பெண்ணை பற்றிய படம். இன்றைய காலகட்டத்தில் அனைத்து சமூகமும் முதியவர்களை ஒதுக்குகின்றனர். தேஜு என்ற பெண் மரணத்தின் பிடியில் இருந்தாலும், உலகை விட்டு பிரிய மனமில்லாமல் இருக்கும் நிலையை மையப்படுத்தி இப்படம் உருவாகிவுள்ளது என கங்கனா கூறியுள்ளார்.

தற்போது, இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மணிகர்ணிகா: தி குயீன் ஆஃப் ஜான்சி’, ராணி லட்சுமி பாயின் சுதந்திர போராட்ட வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா ராணி லட்சுமி பாய் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், ‘சிம்ரன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Leave a Response