தமிழக சட்டசபையில் இன்று சபாநாயகர் மீது ஓட்டெடுப்பு!

danapaal
சபாநாயகர் தனபால் மீது சட்டசபையில் இன்று (மார்ச், 23) நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. குறைவான ஓட்டுகள் பெற்றால் அவரது பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. பிப்ரவரி 18 ம் தேதி தமிழக சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது சட்டசபையில் ஏற்பட்ட ரகளை காரணமாக தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வலுக்கட்டாயமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் 122 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் இடைப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சபாநாயகர் தனபால் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக தி.மு.க., குற்றம் சாட்டியது. மேலும் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சபாநாயகரை நீக்க கோரும் கடிதத்தை, மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி சபாநாயகரிடம் அளித்தார். இந்நிலையில், சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியதும், முதலில் கேள்வி-பதில் நேரம் ஒரு மணி நேரம் நடைபெறும். 11 மணிக்கு சபாநாயகர் தனபால் மீது, திமுக சார்பில் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின் ஓட்டெடுப்பு நடத்தப்படும். இதில் குறைவான ஓட்டுகள் பெற்றால் அவரது பதவி பறிபோகும். நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்துவார்.

Leave a Response