பட்டுப்புழு சூப் குடிக்க ரெடியா!

DSC04964
சிக்கபள்ளபுர மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி தாலுகாவில் இயங்கி வரும் பட்டுப்புழு கல்லூரியில் பட்டுப்புழுவை பயன்படுத்தி உணவு மற்றும் அழகு சாதன பொருட்களை தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விரைவில் இந்த பொருட்கள் விற்பனைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது. சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற உணவு மற்றும் அழகு சாதன பொருட்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது முதன் முறையாக இந்தியாவில் பயனப்டுத்துவதற்கு ஏற்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த பட்டுப்புழு கல்லூரியில் பட்டுப்புழு தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பட்டுப்புழுவில் குறைவான கொழுப்பு இருப்பதால், அதனை வைத்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் இதயம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வடகிழக்கு மாநிலங்களில் வாரச் சந்தைகளில் விற்கப்படும் பட்டுப்புழுக்களில் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. பவுடராக பட்டுப்புழுவினை மனிதர்கள் உண்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உதவி பேராசிரியர் சந்திரசேகர் எஸ்.கல்லிமணி கூறுகையில், பட்டுப்புழுக்களை கொண்டு தயாரித்த பவுடரை கோழிக்கு கொடுத்து சோதித்து பார்த்தோம். தேவையான ஊட்டச்சத்துக்களை அதில் சேர்க்க கால்நடை மருத்துவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்தடியாக, சூப், ஊட்டச்சத்து பானங்கள் வடிவில் தயாரித்து மக்கள் ஏதுவாக பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும். இது இன்னும் 3 அல்லது 3 மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும் என்றார்.

இதேபோன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக தாய்லாந்து சென்றிருந்தபோது, பட்டுப்புழுவில் இருந்து கிடைக்கும் கொக்கூன் எனும் பொருள் அழகு சாதன பொருட்களில் அதிகளவில் சேர்க்கப்படுவது தெரியவந்ததாக சந்திரசேகர் தெரிவித்தார். பட்டில் இருந்து கிடைக்கும் செரிசின் எனும் புரதத்தை பயன்படுத்தி லிப்ஸ்டிக், ஃபேசியல் கிரீம், பாடி லோஷன் போன்றவை தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இந்த புரதத்தில் வயது முதிர்ச்சியடைவதை தடுக்கும் திறன் உள்ளதால் அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

வெளிநாடுகளில் பட்டுப்புழுவில் இருந்து கிடைக்கும் கொக்கூனை சுடு நீரில் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்தால் சருமம் மிருதுவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இதனை இந்தியாவில் சோப் வடிவில் தயாரித்து விற்பனைக்கு விடவிருப்பதாக அவர் தெரிவித்தார். பட்டுப்புழுவை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களிடம் கொடுத்து முதலில் பரிசோதித்து பார்த்தபோது, நல்ல பலன் கிடைத்ததாக அக்கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Response