போக்குவரத்து கழகங்களில் ஓய்வூதியம் கிடைக்காமல் ஓய்வூதியர்கள் தவிப்பு : நிதி பற்றாக்குறை காரணமா?..

tamilnadu
அரசு போக்குவரத்து கழகங்களில் 62 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்துக்கான ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை இதற்கு நிதி நெருக்கடி காரணமா? என கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 62 ஆயிரம் பேருக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாதத்தின் முதல் நாள் மற்றும் 15-வது நாள் என இரு தவணையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியத்துக்காக மாதம் சுமார் ரூ.72 கோடி செலவிடப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழகங்களில் மாணவர்களுக்கான இலவச பஸ் உள்ளிட்ட பல்வேறு இலவச பயணங்களுக்கு அரசு ஆண்டுதோறும் வழங்கும் மானியத் தொகையில் ஒரு பகுதியை ஓய்வூதியம் வழங்கு வதற்காக போக்குவரத்து கழ கங்கள் பயன்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு இலவச பயணங்களுக்கான மானியமாக தமிழக அரசு ரூ.505 கோடி வழங்கியது. ஓய்வூதியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, கூடுதல் செலவீனங்கள் காரணமாக மானியத் தொகை ஒதுக்கீட்டுப் பணம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிந்தது.

அதன் பின்னர் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்கிய பணம் இதுவரை போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் போக்கு வரத்து கழகங்களில் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்துக்கான ஓய்வூதியம் இது வரை வழங்கவில்லை. மாதத்தின் இரண்டாவது தவணை நாளான இன்றும் (மார்ச் 15) ஓய்வூதியம் தராவிட்டால் போராட்டத்தில் குதிக்க ஓய்வூதியதாரர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர் சம்மேளன செயலர் இளங்கோ கூறும்போது, ஓய்வூதியர்கள் அனைவரும் ஓய்வூதியத்தை நம்பியே உள்ளனர். இந்த மாதம் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க பணம் இல்லாமலும், மருத்துவ செலவை ஈடுகட்ட முடியாமலும் தவிக்கிறோம். இரண்டாவது தவணை நாளான இன்றும் ஓய்வூதியம் வழங்காவிட்டால், ஓய்வூதியர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று கூறினார். இந்நிலை மாற்றப்படாவிட்டால் அனைத்து ஓய்வூதியதாரர்கள் குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனை அரசு சீர்தூக்கி பார்க்கவேண்டும்..

Leave a Response