ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?..

Kudankulam-Nuclear-Power-Plant
கூடங்குளம் அணு மின் நிலையத்தின், இரண்டாவது அணு உலையில், வணிக மின் உற்பத்தி எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில், மின் வாரியம் உள்ளது. முதல் அணு உலையில், 2014 இறுதியில், வணிக மின் உற்பத்தி துவங்கியது. இரண்டாவது உலையில், கடந்த ஆண்டு சோதனை உற்பத்தி துவங்கியது. இதுவரை, வணிக உற்பத்தி துவங்கவில்லை.கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே, தற்போது, வெயில் கடுமையாக இருப்பதால், தினசரி மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட் மேல் உள்ளது. 2016 ஏப்., 29ல், உச்ச மின் தேவை, 15 ஆயிரத்து, 343 மெகாவாட்டாக அதிகரித்தது.

நடப்பு கோடை காலத்தில், மின் தேவை, 16 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடங்குளத்தில், மின் வாரியம் கூடுதல் மின்சாரத்தை எதிர்பார்க்கிறது.தற்போது, தண்ணீர் பற்றாக்குறையால், துாத்துக்குடி மின் நிலையத்தில், முழு அளவு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், நெருக்கடி நிலவுகிறது.

தமிழகத்தில், அமலில் இருந்த மின் தடை விலக்கி கொள்ளப்பட்டதற்கு, கூடங்குளம் மின் நிலைய முதல் உலை உற்பத்தியும் முக்கிய காரணம். எனவே, கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்ய, இரண்டாவது அணு உலையிலும், வணிக உற்பத்தி துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனைபற்றி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். எனினும் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறுமா???…

Leave a Response