காதல் கண்கட்டுதே திரைப்பட விமர்சனம்…

Kadhal Kankattudhe Review
புதிய இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், இளைஞர்களின் முயற்சியில் முற்றிலும் இளைஞர்களால் உருவாக்கப்பட்டு வந்திருக்கும் படம் “காதல் கண் கட்டுதே”

தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த ஜானர் ஒன்று உண்டெனில் அது காதல் தான்.

கல்லூரி முடித்த இரு நண்பர்கள் அவர்களுக்குள் காதல், ஊடல், மோதல் பின் காதல் சுபம். இவ்வளவுதான் கதை. ஜெட் வேகத்தில் பயணிக்கும் தமிழ் சினிமா திரைக்கதை சூழலில் ஆமை வேகப் படம்.

குறும்படம் ஒன்று உருவாக்க கூடிய கதையை முழுப்படமாய் உருவாக்கியிருக்கிறார்கள்.

படம் முழுதும் கோவை, பொள்ளாச்சியை சுற்றி நடக்கிறது. நடிகர்கள் அனைவரும் புதிய இளைஞர்கள் என்றாலும் எந்த தயக்கமும் இல்லாமல் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள். ஹிரோ கேஜீ, ஹிரோயின் அதுல்யா இருவரும் தேர்ந்த நடிப்பை தந்திருருக்கிறார்கள். இவர்களின் நடிப்புதான் பல இடங்களில் படத்தை காப்பாற்றுகிறது. ஆனால் காட்சிகளில் எந்த ஒரு ஆர்வமும் வரவில்லை.

இருவரும் காதலிக்கிறார்கள் , பைக்கில் போகிறார்கள், டீ சாப்பிடுகிறார்கள், சண்டை போடுகிறார்கள் இதைத் தவிர படத்தில் ஏதும் நடக்கவில்லை. ரசிகனை கவரும் வகையில் எந்த ஒரு விசயமும் இல்லை.

படத்தின் ஒரே பெரிய பலம் வசங்களும், இசையும் தான். பெண்ணுரிமை பற்றி பேசப்படும் வசனங்கள், போகிற போக்கில் கார்பரேட் உலகம் பற்றி, வாழ்க்கை பற்றி, ஊடல் பற்றி, காதல் பற்றி பேசப்படும் வசனங்கள் படத்திற்கு சுவை கூட்டுகின்றது.

இசையமைப்பாளர் பவனின் இசை ஒரு பெரும் பலமாக ஒலிக்கிறது. பாடல்கள் சிறிய அளவே இருந்தாலும் தேர்ந்த இசையமைப்பு. பின்னனி இசை படத்தின் உணர்வுகளை நம்மிடம் கடத்தி வருகிறது.

எடிட்டிங்கில் நிறைய காட்சிகளை தூக்கியிருக்கலாம். பல காட்சிகள் ஏன் வருகிறது, ஏன் ஸ்லோமோஷனில் வருகிறது எனத் தெரிய வில்லை. ஒளிப்பதிவு மற்றொரு மைனஸ் படம் முழுதும் ஓவர் எக்ஸ்போஷர் ஆகயிருக்கிறது. அதை DI மூலம் சரிசெய்ய பயங்கர பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அது பல இடங்களில் கேவலாமகி விட்டது.

பெரிதாய் எவரையும் கவராமால் கடந்து போகும் மற்றுமொரு முயறிசியாகி இருக்கிறது இந்த “காதல் கண் கட்டுதே”.

Leave a Response