இசை வெளியீட்டு விழாவை வித்யாசமாக நடத்திய படக்குழுவினர்…

Kanavu Variyam AL
உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் ஸ்டுடியோ வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் இயக்குனர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்பட பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிப்ரவரி 8, 2017 அன்று வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS) தயாரிப்பில் உருவான ஜனரஞ்சகமான திரைப்படம் ‘கனவு வாரியம்’, திரைக்கு வரும் முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச அங்கீகாரங்களையும், கௌரவங்களையும் வென்றுள்ளது. உலகப் புகழ்ப் பெற்ற 2 சர்வதேச ‘ரெமி’ விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் ‘கனவு வாரியம்’. இந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் ‘கனவு வாரியம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் சிவன் தலைமையில், இயக்குனர் இமயம் பாரதிராஜா ‘கனவு வாரியம்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை வெளியிட, வார்னர் பிரதர்ஸின் இயக்குனர்களான திரு.ஜார்ஜ் மற்றும் திரு.கெளரவ் பெற்றுக் கொண்டார்கள். தமிழ்த் தாய் வாழ்த்தை பெரம்பலூர் மருத்துவ கல்லூரி டீன் பத்மஶ்ரீ டாக்டர் சீர்காழி கோ. சிவ சிதம்பரம் அவர்கள் பாடி விழாவை தொடங்கி வைத்தார்கள்.

விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் சிவன் அவர்களுக்கு ‘Inspiring Scientist of India’ என்ற விருதும், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு ‘Inspiring Director of India’ என்ற விருதும், பத்மஶ்ரீ டாக்டர் சீர்காழி கோ. சிவ சிதம்பரம் அவர்களுக்கு ‘Inspiring Voice of India’ என்ற விருதும், வழங்கப்பட்டது.

‘கனவு வாரியம்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டின் குறியீட்டை கண்டுபிடித்த திரு. உதயகுமார் அவர்களுக்கும், Tamil Nadu Weatherman பிரதீப் ஜான் அவர்களுக்கும், ‘நல்ல கீரை’ அமைப்பின் நிறுவனர் திரு.ஆர். ஜெகன்நாதன் அவர்களுக்கும் ‘Inspiring Son of Tamil Nadu’ என்ற விருதை விஞ்ஞானி டாக்டர் சிவன் அவர்கள் வழங்கினார்கள்.

‘கனவு வாரியம்’ விழாவில் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் சிவன் அவர்கள், “சினிமாவே அதிகம் பார்க்காத எனக்கு ‘கனவு வாரியம்’ திரைப்படம் பார்க்கும் பொழுது எனது சிறு வயது வாழ்க்கை நினைவிற்கு வருகிறது. இந்தப் படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். ‘கனவு வாரியம்’ திரைப்படம் இந்தியாவின் முக்கிய பிரச்சனையான மின்வெட்டை மையப்படுத்தி ஜனரஞ்சகமாக எடுத்திருப்பது சிறப்பு. தற்போதைய தேவையான ‘grass root innovation’ பற்றி எடுத்திருப்பது சிறப்பு. இயக்குனர் அருண் சிதம்பரம் அறிவியலை மையப்படுத்தி இன்னும் பல திரைப்படங்களை ஜனரஞ்சகமாக தர வேண்டும். அதற்கு இஸ்ரோ என்றும் துணை நிற்கும்” என்றார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசுகையில், “எனக்கு இயக்குனர் அருண் சிதம்பரத்தை ஏழு ஆண்டுகளாக தெரியும். அமெரிக்காவில் இருந்து அவர் சென்னை வரும் போதெல்லாம் என்னை பார்த்து விட்டு செல்வார். ஆனால் அவர் ஒரு திரைப்படம் எடுப்பார் என்று நினைக்கவே இல்லை. 51 கிராமிய விளையாட்டுக்களை உள்ளடக்கி அவர் உருவாக்கி இருக்கும் இத்திரைப்படத்தில் இடம் பெறும் ‘கல்லா மண்ணா’ என்ற பாடல் என்னை கிராமத்திற்கே அழைத்துச் சென்றது. இந்தப் பாடலிலேயே இவ்வளவு நுணுக்கங்கள் உண்டென்றால், இத்திரைப்படத்தில் எவ்வளவு இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். இங்கிருக்கும் எல்லோரும் ஹாலிவுட்டை பார்த்து படம் எடுத்துக் கொண்டிருக்கையில், அருண் சிதம்பரம் அமெரிக்காவில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்து விட்டு, தமிழகம் திரும்பி மண்வாசனையோடு ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை எடுத்துள்ளார். அவர் கையாண்டிருக்கும் மின்வெட்டு பிரச்சனையை அவ்வளவு எளிதில் யாரும் எடுக்க துணிய மாட்டார்கள். இத்திரைப்படம் என் எதிர்பார்ப்புகளை மிஞ்சி நிற்கும். ஒரு நல்ல படைப்பாளி, இயக்குனர் தமிழ்த் திரை உலகிற்கு கிடைத்துள்ளான். அருண் சிதம்பரத்தை மறுபடையும் யாரும் அமெரிக்கா செல்ல விடமாட்டார்கள். இந்தப் படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் அருண் சிதம்பரம் நடித்துள்ளார். பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. இவரை எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். அருண் சிதம்பரம் இது போல் இன்னும் நிறைய திரைப்படங்களை எடுத்து என் போன்ற இயக்குனர்களை பொறாமை பட வைக்க வேண்டும்” என்றார்.

பெரம்பலூர் மருத்துவ கல்லூரி டீன் பத்மஶ்ரீ டாக்டர் சீர்காழி கோ. சிவ சிதம்பரம் பேசும்போது, “உலகத்தில் உள்ள மிகப் பெரிய விருதுகளை கனவு வாரியம் திரைப்படம் வென்றுள்ளது. இது இந்தியாவிலும் மிகப் பெரிய வெற்றியை தரும். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கிறுக்கன் என்னும் பாடல் மிகவும் அற்புதமான பாடல். இந்தப் பாடல் புதிய ஸ்டைலில் அமைந்துள்ளது. நான் பயிற்சி எடுத்து கொண்டு தான் இப்பாடலையே பாடினேன். இப்பாடல் மிகப் பெரிய அளவில் பேசப்படும்” என்றார்.

‘கனவு வாரியம்’ திரைப்படத்திற்கு அருண் சிதம்பரம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். அருண் சிதம்பரம் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை (B.E., MS) முடித்துவிட்டு புகழ்பெற்ற வங்கியான ‘ஜே பி மார்கன் சேஸில்’ (சிகாகோவில்) பணிபுரிந்தார்.

‘கனவு வாரியம்’ திரைப்படத்தில் ஜியா (அறிமுக கதாநாயகி), இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக் ஜெப்பி, செந்தி குமாரி உட்பட பலர் நடித்துள்ளனர். இசை – ஷியாம் பெஞ்சமின், ஒளிப்பதிவு – எஸ்.செல்வகுமார், படத்தொகுப்பு – காகின்

‘ஆணழகன்’ டாக்டர் அ.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ்’ (DCKAP CINEMAS) பேனரில் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

Leave a Response