மத்திய அரசு மீது சீரும் ஜல்லிக்கட்டு போராளி – சிறப்பு பேட்டி

whatsapp-image-2017-01-04-at-12-36-48-pmஜல்லிக்கட்டு விவகாரத்தை பற்றி நம் ‘ஒற்றன் செய்தி’ நிருபர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தின் மாநிலத் தலைவர் திரு.ராஜேஷ் அவர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது,

பாஜக ஜல்லிகட்டை நடத்த வேண்டும் என முன் வரவில்லை. ஜல்லிகட்டு மட்டுமில்ல காவேரி மேலாண்மை பிரச்சனை ஆக இருக்கட்டும், மீனவர்கள் பிரச்சனை ஆக இருக்கட்டும் எதற்கும் முன்வரவில்லை. எல்லாவற்றிலும் தமிழர்கள் தான் புறக்கணிக்கப் படுகிறோம் என்பது தான் உண்மை.

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டால், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. தற்போது எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார். அப்புறம் ஏன் குளிர்கால கூட்டத்தொடரில் இதுபற்றி பேசப்போவதாக கூறினார். அப்போது தெரியாதா வழக்கு நடந்து வருகிறது என்று?.

இதை ஒரு 6 மதத்திற்கு முன்னதாகவே சொல்லி இருக்கலாம், ஆனால் உங்கள் விளம்பரத்துக்காக ஜல்லிகட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று கூறி கடைசி நேரத்தில் வழக்கு நடக்கிறது என்று கூறுவது சரியா?.

தமிழகத்தின் சார்பில் உள்ள பாஜக அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல்  பேசலாமா?.

நம் மத நம்பிக்கை, கலாச்சாரமான ஜல்லிகட்டு அரசியல் ஆக்கபட்டு விட்டது. அரசியல் சாயம் பூசப்பட்டதனால் தான் இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர முடியவில்லை. இது என்னோட கருத்து மட்டும் இல்லை ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தும் இதுதான்.

நம்முடைய உரிமைகளை மீட்டு எடுக்க தானே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மாநிலங்கள் அவையில் சட்டசபையில் இருக்கிறார்கள். அவர்கள் எதுவும் பண்ணவில்லை என்ற பட்சத்தில் இந்த ஜனநாயகத்தின் குடிமகனாய் நானே நம்முடைய உரிமையை மீட்டு எடுப்பதற்கு குரல் கொடுக்க எனக்கு உரிமை இருக்கு. நான் இரண்டு வருடங்களாக என்னோட கலச்சாரத்தையும் அடையாளத்தையும் தொலைத்துவிட்டு இருக்கிறேன்.

திபாவளி, புத்தாண்டு அனைவரும் கொண்டாடுவார்கள், அனால் விவசாயிகள் கொண்டாடும் பண்டிகை பொங்கல் மட்டும் தான்.

சில கிராமத்தில் அவர்கள் ஊரில் நடக்கும் திருவிழா தான் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு எல்லாம். அந்த மாதிரி நடக்கும் திருவிழாவில் ஜல்லிக்கட்டுக்கு தான் முக்கியமான பங்கு. அது இல்லாமல் இரண்டு வருடமாக திருவிழாக்கள் கொண்டாடாமல் இருக்கிறார்கள்.

விவசாயிகள் வாழ்வாதாரம் மாடுகளை சுற்றி தான் இருக்கிறது. இதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

ஜல்லிக்கட்டு மேல் அரசியல் சாயம் பூசப்பட்டது, கலாச்சாரத்தை மீட்டெடுக்க கஷ்டப்படுகிறோம். இதுதான் என் உண்மையான கருத்து.”

என வீர விளையாட்டு மீட்பு கழகத்தின் மாநிலத் தலைவர் திரு.ராஜேஷ் கூறியுள்ளார்.

 

Leave a Response