தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் : அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு


jayalalithaமுன்னாள் தென்னிந்திய திரைப்பட நடிகையும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஜெயலலிதா, கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி தம்பதியினரின் மகளாக பிப்ரவரி மாதம் 24ம் தேதி 1948ஆம் ஆண்டு பிறந்தார்.

ஜெயலலிதாவின் இரண்டு வயதிலேயே அவரது தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்தார். ஜெயலலிதாவிற்கு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த போதே திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிக்கத் தொடங்கினார். ஸ்ரீதர் இயக்கிய ‘வெண்ணிற ஆடை’ என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஜெயலலிதா.

இப்படத்தை அடுத்து எம்.ஜி.ஆர். உடன் இணைந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற படத்தில் நடித்து பிரபலமானார். இதுவரை 127 திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார். மேலும் சிவாஜி கணேசனுடன் 17 படங்கள், ஜெய்சங்கருடன் 8 படங்கள்,  ரவிச்சந்திரனுடன் 10 படங்கள், நாகேஸ்வரராவ்வுடன் 7 படங்கள், முத்துராமனுடன் 6 படங்களில் நடித்துள்ளார். மேலும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன், என்.டி.ராமராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார். இவருடைய சிறந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். தமிழில் நடித்த 92 படங்களில் 85 படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதுபோல் இவர் நடித்த 28 தெலுங்கு படங்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக 1992ம் ஆண்டு ‘நீங்க நல்லா இருக்கனும்’ என்ற படம் வெளியானது.

இதுதவிர, பல படங்களுக்கு பாடல்களும் பாடியிருக்கிறார். இவர் முதன் முதலாக, ‘அடிமை பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு…’ என்ற பாடலை பாடினார். இந்த பாடல் இன்று வரை அனைவரும் விரும்பி கேட்கும் பாடலாக இருந்து வருகிறது. 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாட்டு பாடியிருக்கிறார்.

ஜெயலலிதா நடித்துக் கொண்டிருக்கும் போதே, 1981ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான இவருக்கு 185-வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989வது ஆண்டில் அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். 1989ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1991ம் ஆண்டு பர்கூர், காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

பின்னர் தேர்தலில் போட்டியிடாமல் 2001ம் ஆண்டு மே மாதம் முதல் செப்டம்பர் வரை முதல்வராக பதவி வகித்தார். பின்னர் 2002, 2011 ஆண்டுகளில் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி வகித்தார். அதன்பின் 2015ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று முதலைமைச்சராக இருந்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை கடந்த சில நாட்களாக நல்ல நிலையில் தேறி வந்ததாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் நேற்று மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே அவர்களின் ஆலோசனையின்படியே சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை முதல்வரின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை சற்று முன் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘நேற்று மாலை மாரடைப்பால் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் முதல்வர் உள்ளார். இருப்பினும் முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான வகையில் உள்ளது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று கோடான கோடி தமிழக மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று(5/12/16) இரவு 11:30 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்.


 

Leave a Response