1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென்று அறிவிக்கப்பட்டதால் ஓட்டல்கள், கடைகளில் அவைகளை வாங்க மறுத்தனர். இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
மாதத்தின் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். மக்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் பலரும் மாத சம்பளத்தை ஏ.டி.எம்.களில் ஒருசில நாட்கள் முன்னர் தான் எடுத்துள்ளனர். ஏ.டி.எம்.களில் 100 ரூபாய் நோட்டுகள் 5 தான் வரும், இதர தொகை முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுகளாகத் தான் வரும்.
எனவே பிரதமர் அறிவித்ததும் பொதுமக்கள் அந்த நோட்டுகளை உடனடியாக மாற்றுவதற்கோ, பொருட்கள் வாங்குவதற்கோ முடியாமல் சிரமப்பட்டனர். நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று அறிவித்தாலும் அறிவிப்பு வெளியானது முதலே பெரும்பாலான கடைக்காரர்கள் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர்.
கடைகள் மட்டுமின்றி ஓட்டல்கள், சினிமா தியேட்டர்களிலும் அந்த நோட்டுகளை வாங்க மறுத்தனர். பெட்ரோல் நிலையங்களில் 11-ந் தேதி வரை கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் பல பெட்ரோல் நிலையங்களிலும் கூட்டமாக இருந்தது. அதிலும் சில பெட்ரோல் நிலையங்களில் அந்த நோட்டுகளை வாங்க மறுத்தனர். இதனால் பொது மக்கள் செய்வதறியாது தவித்தனர்.
அந்த நோட்டுகளை நம்பி ஓட்டல்களில் சாப்பிட்டவர்களின் நிலை படுமோசமாகவே இருந்தது. அவர்கள் ஓட்டல்காரர்களிடம் போராடி ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.
சிலர் அவசரமாக ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று 100 ரூபாய் நோட்டுகளை எடுத்தனர். அதேபோல பலர் தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை பணத்தை டெபாசிட் செய்யும் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் இரவு நேரத்திலும் நீண்ட வரிசை காணப்பட்டது.
பல ஏ.டி.எம்.களில் 100 ரூபாய் நோட்டுகள் இல்லை. 500 ரூபாய் நோட்டுகளாகவும், 1,000 ரூபாய் நோட்டுகளாகவும் இருந்ததால் பணம் எடுக்க சென்றவர்கள் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பிரதமரின் இந்த அறிவிப்பு எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரியான காலஅவகாசம் கொடுக்காமல் இந்த திட்டத்தை அமல்படுத்தியது தவறு. இதனால் நாங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. கடைகளுக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாது.
மேலும் ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டையை கொண்டு சென்றால் தான் வங்கிகளில் பணத்தை மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள். எனவே நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வங்கிகள், ஏ.டி.எம்.கள் இன்று இயங்காது என்பதால் இந்தநிலை மாறுவதற்கு மேலும் ஒரு சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.